உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

சிதம்பரம் மாரியம்மன் கோவில் விழாவில் பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை

 http://img.dinamalar.com/data/large/large_286828.jpg

சிதம்பரம்: 

           சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில், அம்மனை வேண்டி, பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

           கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே, சிறப்பு வாய்ந்த கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்கள், குல தெய்வமாக வழிபடுகின்றனர். இக்கோவில் தீ மிதி விழாவில், முஸ்லிம்கள் முதல் தீட்சிதர்கள் வரை, சர்வ மதத்தினரும் வேண்டுதலின் பேரில், தீ மிதித்து வருகின்றனர். கடந்த மாதம் 22ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தீ மிதி திருவிழா, நேற்று 1ம் தேதி நடந்தது. அதிகாலை, 5 மணி முதல் அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனைகள் நடந்தது. 

               கை, கால் என, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு குணமாகியதால் பொம்மையால் ஆன, உடல் உறுப்புகளை அம்மனுக்கு செலுத்தி, வேண்டுதல் நிறைவேற்றினர். தீராத வயிற்று வலி, பிரசவம் சுகமாக முடிய வேண்டிக் கொண்டவர்கள், கோவில் வெளி மண்டபத்தில், வரிசையாக வாழை இலை படுக்கையில் படுக்க வைத்து, அவர்கள் வயிற்றில் வாழை இலை போட்டு, மா விளக்கு படையல் செய்து, உறவினர்கள் வரிசையாக நின்று, அம்மனை வழிபடும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

               வேண்டுதலின் பேரில், பாடை பிரார்த்தனை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில் பச்சை தென்னை ஓலையில், வேப்ப இலைகளை போட்டு அதில் வேண்டுதலுக்குரிய நபரை படுக்க வைத்து, கோவிலைச் சுற்றி இழுத்து வருகின்றனர். இந்த பாடை பிரார்த்தனையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, படுக்க வைத்து இழுத்துச் சென்றனர். 

             தொடர்ந்து அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், மாலை சோதனை கரகம், அலகு தரிசனம், அக்னிசட்டி ஏந்தி வீதியுலா வருதல் ஆகியவை நடந்தன. அதனைத்தொடர்ந்து, மாரியம்மன் தீ குண்டத்திற்கு முன் எழுந்தருள செய்யப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior