உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், செப்டம்பர் 19, 2011

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா

கடலூர்::

            ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், முதல்வரின் தேர்தல் வாக்குறுதியில் முத்தாய்ப்பான திட்டம் என்று சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார். 

              ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை  நடந்தது. 

விழாவில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

           முதல்வர் அளித்த வாக்குறுதியில் முத்தாய்ப்புத் திட்டம் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்குவதாகும். பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட  அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் முதல்வரின் திட்டங்கள் அமைந்து உள்ளன என்றார் அமைச்சர் சம்பத். 

விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில்,

           பட்டம், பட்டயம் பயின்ற பெண்களுக்கு திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும், 10-ம் வகுப்பு பயின்ற பெண்களுக்கு  4 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவே உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் திருமண உதவித் தொகையும், தங்க நாணயமும் வாரம்தோறும், அமைச்சர்களாலோ, மாவட்ட ஆட்சியராலோ வழங்கப்படும் என்றார். 

                இந்த விழாவில் 500 பயனாளிகளுக்கு ரூ.2,01,18,000 மதிப்பிலான தங்க நாணயங்கள், உதவித் தொகை ஆகியவற்றை இரு அமைச்சர்களும் வழங்கினர்.  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, கடலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior