கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் நத்தை பிடிக்கச் சென்று திரும்புகையில், தாழங்குடா அருகே கரையேற முடியாமல் தத்தளிக்கும் படகு.
கடலூர்:
வங்கக் கடலில் புதன்கிழமை சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் கடலூரில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். மேலும் 10 படகுகள் சேதமடைந்தன.
கடலூரில் றபுதன்கிழமை வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலும் விழுந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. தேவனாம்பட்டினம் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. அலைகள் சுமார் 20 அடி உயரம் வரை எழுந்து ஆர்ப்பரித்தன. இதன் காரணமாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 5 ஆயிரம் சாதாரணப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் வி.சுப்புராயன் கூறியது:
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. சிறிய படகுகளில் கரையோரங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களும் தொழில் செய்யவில்லை. கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் சிலர் கடலுக்குள் சென்று கரை திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். வங்கக் கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதுடன், நீரோட்டம் முற்றிலும் மாறி இருக்கிறது. இதனால் வலை போட்டாலும் நிலைப்பதில்லை. கடந்த ஒரு மாதமாகவே கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் சரியாக இல்லை. பல நாள்கள் கடலில் இருந்தும், மீனவர்கள் வெறும் கையுடன் திரும்பி வருகின்றனர் என்றார்.3 மீனவர் காயம்: கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் கரையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நத்தை என்று அழைக்கப்படும் கோழிச் சங்கு அதிகம் கிடைக்கிறது.
மீனவர்கள் பலர் கண்ணாடி இழைப் படகுகளில் சென்று இவற்றைப் பிடித்து வந்து, கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கும் வியாபாரிகள், சிங்கப்பூர், தைவான், மலேஷியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். அந்த நாடுகளில் செல்வந்தர்கள் ஏற்பாடு செய்யும் விருந்துகளில், கோழிச் சங்கு பரிமாறப்படுகிறது. கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை, கடல் சீற்றத்தையும் பொருள்படுத்தாமல் 5 கண்ணாடி இழைப் படகுகளில் நத்தை பிடிக்கச் சென்றனர். ஒரு படகில் தாழங்குடா மீனவர்கள் தனவேல் (30), சத்தியமூர்த்தி (27), கார்த்திக் (27), அகிலன், விஜயன் ஆகியோர் இருந்தனர்.இவர்கள் பிடித்த நத்தைகளை, புதுவை மாநில கடலோரப் பகுதியில் உள்ள வியாபாரியிடம் விற்றுவிட்டு, தாழங்குடா நோக்கி படகில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கடல் சீற்றம் அதிகரித்ததால் அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில் படகு, என்ஜின், வலை ஆகியவை சேதம் அடைந்து தண்ணீரில் மூழ்கின. படகை அப்படியே விட்டு விட்டு, மீனவர்கள் ஐவரும் நீந்திக் கரை சேர்ந்தனர். இவர்களில் தனவேல், சத்தியமூர்த்தி, கார்த்திக் ஆகியோர் காயம் அடைந்தனர். 10 படகுகள் சேதம்: பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலூரை அடுத்த சாமியார் பேட்டையில், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 விசைப் படகுகளை அலைகள் இழுத்துச் சென்றன. அவை பலத்த சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். படகுகளைக் கரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக