கடலூர் :
முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் "க்ளோஸ் சர்க்யூட் கேமரா' பொருத்தாத வங்கிகள் மற்றும் வர்த்த நிறுவனங்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், அடகு கடைகள் மற்றும் நகைக் கடைகளில் இரவு நேரங்களில் சுவற்றில் துளை போட்டு அங்குள்ள நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.பண்ருட்டியில் சண்முகம் என்பவரின் அடகு கடையில் கடந்த மே மாதம் 17ம் தேதி இரவு உள்ளே புகுந்த மர்ம கும்பல் அங்கு படுத்திருந்த சண்முகத்தை கொலை செய்துவிட்டு 80 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது. இதேப்போன்று கடந்த 9ம் தேதி இரவு திட்டக்குடியில் பூபதி என்பவரின் நகைக் கடையில் புகுந்த மர்ம கும்பல் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றன.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களில் திருட்டுகள் அதிகரித்துள்ளது.இதனைத் தடுக்க போலீசார், மக்கள் அதிகம் கூடும், மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் "க்ளோஸ் சர்க்யூட்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இதனை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொருட்படுத்தவில்லை. பெயரளவிற்கு தங்களது வர்த்தக நிறுவனங்களில் இரவு நேர காவல் பணிக்கு முதியவர்களை நியமித்துள்ளனர்
.இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.மேலும், குற்றங்களைக் குறைக்க போலீஸ் துறைக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறியதோடு, தமிழகத்தில் குற்றங்களை குறைக்க வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என்பதை நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் விதியாக்கப்படும் என அறிவித்துள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்டத்தில் பண பரிமாற்றம் அதிகம் நடைபெறும் வர்த்தக நிறுவனங்கள், விலை மதிப்பு மிக்க வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள், நகை கடைகள், அடகு கடைகள் பற்றிய விவரங்கள். அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளனவா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு, அரசு மற்றும் தனியார் வங்கிகள் 240 உள்ளன. அவற்றில் 81 வங்கிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மற்றும் பிரதான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளன. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் பெரும்பாலானவற்றில் இந்த வசதி ஏற்படுத்தவில்லை.அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 326 நகைக்கடைகளில் 63 கடைகளிலும், 823 அடகு கடைகளில் நான்கில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.கண்காணிப்பு கேமரா பொருத்தாத வங்கிகள், நகை மற்றும் அடகு கடைகளில் விரைவில் பொருத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக