கடலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு காரணமாக, நெல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியில் 1.45 லட்சம் ஏக்கர் உள்பட, 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நாற்று நடவு முடிவடைந்து உள்ளது. இவற்றில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிருக்கு, உடனடியாக யூரியா தேவைப்படுகிறது. ஆனால் போதுமான அளவு யூரியா கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நெல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொட்டாஷ் உரத்தேவை முழுமைக்கும் இந்தியா, வெளிநாடுகளையே நம்பி இருக்கிறது. டி.ஏ.பி. உரத்தேவையில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் யூரியா உற்பத்தி செய்யும் ஆலைகள் பல இருந்தும், பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம் காரணமாக பல ஆலைகள் யூரியாவை உற்பத்தி செய்யாமல் வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்பனை செய்யத் தொடங்கி இருக்கின்றன. இந்திய தேவைக்கான யூரியாவில் 80 சதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் ரசாயன உரங்களுக்கு தமிழகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட யூரியா தேவை குறித்து வேளாண் அதிகாரி கூறியது:
கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நெற்பயிரில் 1.5 லட்சம் ஏக்கர் பயிருக்கு நவம்பர் மாதத்துக்கு மட்டும், 8 ஆயிரம் டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் 1,400 டன் யூரியா கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு டான்ஃபெட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. தனியார் உரக் கடைகளுக்கு கடந்த வாரம் 800 டன் யூரியா வழங்கப்பட்டது. மேலும் 600 டன் யூரியா தனியார் கடைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. மேலும் 1,500 டன் யூரியா கடலூர் மாவட்டத்துக்கு உடனடி தேவையாக உள்ளது.
தமிழ் நாட்டுக்குத் தேவையான யூரியா, கப்பல் மூலம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, கடலூர் மாவட்டத்துக்கு ரயில் வேகன்கள் மூலம் விருத்தாசலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விநியோகிக்கப்படும் என்றார். மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், இப்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிருக்கு யூரியா அத்தியாவசியத் தேவையாக உள்ளது. யூரியா பற்றாக்குறை பயிர்களை பெரிதும் பாதிக்கும். கடந்த வாரம் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்ட 1,400 டன் யூரியா முழுவதும் ஒரு மணி நேரத்தில் காலியாகிவிட்டது.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்குத்தான் யூரியா வழங்கப்பட்டது. மற்றவர்கள் தனியார் கடைகளைத்தான் நம்பி இருக்கிறார்கள். ஆனால் அங்கும் யூரியா கிடைப்பது இல்லை. பலர் அதிக விலைக்கும் விற்கிறார்கள். கப்பல் மூலம் மேற்கொண்டு யூரியா வந்துகொண்டு இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக