கடலூர்:
எஸ்.எம்.எஸ். மூலம் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டத்துக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியர்களின் வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கும் முறை தர்மபுரி மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் திட்டம் கைவிடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியராக வே.அமுதவல்லி பொறுப்பு ஏற்றதும், இத்திட்டத்தை கடலூர் மாவட்ட பள்ளிகளில் அமல்படுத்தினார். கடந்த ஜூலை மாதத்தில் சோதனை அடிப்படையிலும், ஆகஸ்ட் முதல் நிரந்தரமாகவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 4 செல்போன் எண்கள் இதற்காக தரப்பட்டுள்ளன.
இதையடுத்து சுகாதாரத் துறையினருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பிட்ட செல்போன் எண்களுக்கு பள்ளி வேலை நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் வருகை குறித்து, எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் மாவட்ட என்ஐசி மையத்தின் சர்வர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விடும். இத்திட்டத்துக்கு கடலூர் மாவட்ட பெற்றோர் மற்றும் பொதுநல அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட பெற்றோர் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கவிஞர் பால்கி கூறுகையில்,
இத்திட்டத்தால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து உள்ளது. அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் இத்திட்டத்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்கள் வருகையை தெரிவிக்கும் திட்டத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் 99 சதவீத ஆசிரியர்கள், குறித்த நேரத்தில் பள் ளிக்கு வந்து விடுகிறார்கள் என்றும் அச்சங்கம் தெரிவிக்கிறது.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
இத்திட்டத்தை முதல்முதலாக கடலூர் மாவட்டத்தில அறிமுப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அமுதவல்லிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மக்களுடன் அதிக நெருக்கமான சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, ரேஷன் கடைகள் ஆகியவற்றுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் பஸ் ஓட்டுநர் பி.பண்டரிநாதன் கூறுகையில்,
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது இல்லை. இதனால் மாணவர்களில் அடிப்படைக் கல்வியே ஆட்டம் காண்கிறது. ஒரு ஆசிரியர் 5 வகுப்புகளையும் பார்த்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த எஸ்.எம்.எஸ். திட்டம் அமையும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக