உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் பஸ் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் பஸ் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 04, 2012

மிக விரைவில் கடலூரில் மிக பெரிய பேருந்து நிலையம்

கடலூர்:
 
        கடலூரில் விரைவில் விசாலமான பஸ் நிலையம் அமையும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.  
 
            3 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் வந்துபோகும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தை பஸ் நிலையம் என்று சொல்வதை விட வணிக வளாகம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு வணிகர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி காணப்படுகிறது. இதனால் பஸ் பயணிகளின் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.  எனவே இதை நகர பஸ் நிலையமாக்கி விட்டு, கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடத்தில் புதிய விசாலமான பஸ் நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பலமாகப் பேசப்பட்டு வந்தது. கடலூர் நகராட்சியிலும் புதிய பஸ்நிலையம் வேண்டும் என்ற தீர்மானம் ஏற்கெனவே 6 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 
 
          இந்த நிலையில் கடலூர் செம்மண்டலத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலைய நிலத்தில் நிலத்தடி நீர், உவர் நீராகி விட்டதால் பயிர்கள் சரியாக வளர்வதில்லை என்று கூறப்படுகிறது.   எனவே இங்குள்ள வேளாண் துறை அலுவலகங்கள், வேளாண் பல்கலைக்கழக அலுவலகம் ஆகியவற்றுக்கான கட்டடங்கள் அமைந்து இருக்கும் நிலங்களை மட்டும் விட்டு விட்டு, மீதம் உள்ள நிலத்தை பஸ் நிலையத்துக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
 
          கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை வழங்கலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இடையே கடந்த இரு நாள்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை, வணிகப் பெருமக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஏற்கெனவே லாரன்ஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் வரவிடாமல் தடுத்த பெருமையும், ரயில்வே சுரங்கப்பாதை வரக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பெருமையும் அவர்களுக்கு உண்டு.  
 
          தற்போதைய பஸ்நிலையம் அமைந்திருக்கும் லாரன்ஸ் சாலையில் பெரும்பகுதி நிலங்கள், கோயில்களுக்கும் நகராட்சிக்கும் சொந்தமானவை. இதில்தான் பெரும்பகுதி வணிகர்கள் கட்டுமானங்களைச் செய்து கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இவர்களின் வர்த்தகத்தால் கோயில்களுக்கோ, நகராட்சிக்கோ பெரிய வருவாய் எதுவும் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தகுந்தது.
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர்திருப்பாதிரிப்புலியூர் நாகம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா


கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் அருகே உள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை இரவு பூ வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது
கடலூர்:

           10 நாள்கள் நடைபெற்று வந்த, கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தை அடுத்துள்ள நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழா, சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

              சனிக்கிழமை நிறைவு விழாவாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் வீதி ஊர்வலம் நடந்தது. கடலூர் நகர மலர் வணிகர்கள் மற்றும் மலர் வணிகத்தில் உள்ள தொழிலாளர்கள் சார்பில் இவ்விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் இக்கோயில் அமைந்து இருப்பதால், விழாவையொட்டி லாரன்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு இருந்தது.






Read more »

வெள்ளி, ஜூலை 29, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 இணைப்பு சாலைகள்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/8de74606-f24e-4c8a-8126-6047c64585ca_S_secvpf.gif
 
கடலூர்:

             கடலூர் நகரின் மைய பகுதியாக உள்ளது லாரன்ஸ் ரோடு. இந்த சாலையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லாரன்ஸ் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது.

           ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரூ.22.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணி நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதையடுத்து ரெயில்வே சுரங்கப்பாதை பணியை தொடங்க டெண்டர் விடுமாறு கலெக்டர் அமுதவல்லி உத்தரவிட்டார்.

            இந்த நிலையில் இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிபுலியூர் கீழ்பாலம் பயனாளிகள் மற்றும் ஆலோசனைக்குழு கூட்டம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. 
 
கூட்டத்துக்கு சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணசேன் தலைமை தாங்கி பேசியது:-

              கடலூரில் ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை பணி 13 மாதத்தில் முடிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. தற்போது 3 ஆண்டு காலத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. சுரங்கப்பாதை பணியில் பள்ளம் தோண்டும் போது அருகில் உள்ள கட்டிடங்கள் சுமார் 5 அடி முதல் 10 அடி வரை மண்ணுக்குள் புதையும் அபாயம் உள்ளது. மேலும் பாண்பரி மார்க்கெட் செல்ல பொதுமக்கள் திணறும் நிலை உள்ளது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதை திட்டத்தில் 5 முக்கிய இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கடலூரில் போக்குவரத்தை சீரமைத்து விடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

            கூட்டத்தில் அழகப்பா ஜுவல்லரி (பெரியவர் கடை) உரிமையாளர் ராஜகோபால், வள்ளிவிலாஸ் பாலு, பவானி ஜெயபால் உள்பட பலர் பேசினார்கள். பயனாளிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், பிப்ரவரி 28, 2011

அசுத்தத்தின் பிடியில் கடலூர் மையப் பகுதி

கடலூர்:

               குப்பைகள் நிறைந்த அசுத்தத்தின் பிடியில் கடலூர் நகரின் மையப்பகுதி சிக்கித் தவிக்கிறது. 

             கடலூர் பஸ் நிலையம் அருகே 200 வணிக நிறுவனங்களைக் கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துத்துக்குள் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள். இந்த வணிக வளாகம் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் நகராட்சி விதிகளுக்கு உள்பட்டு அமைக்கப்படவில்லை. மிகவும் குறுகலான சாலைகள் காரணமாக, ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதே மிகவும் கடினம்.

                 பல மாடிகளைக் கொண்ட லாட்ஜுகளும் இங்கு இடம்பெற்று உள்ளன. இந்த வணிக வளாகம் எப்போது பார்த்தாலும் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது. அசுத்தத்தின் உச்சத்தில் இருப்பது மட்டுமன்றி, இப்பகுதிக்குள் கட்டாயத்தின்பேரில்  வந்துபோகும் பொதுமக்கள், நிச்சயம் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயமும் நீடித்து வருகிறது. இந்த வணிக வளாகத்துக்குள் ஏராளமான மொத்த வணிகம் செய்யும் பூக்கடைகள் உள்ளன. அவைகள் வெளியேற்றும் அழுகல் பூக்களின் கழிவுகளால், ஏற்படும் சுகாதாரக் கேடுகள்தான் மிக அதிகம் என்று, பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

                    எனினும் இது குறித்து நகராட்சி அதிகாரிகளைக் கேட்கும் போதெல்லாம், இந்த தனியார் வணிக வளாகம் நகராட்சியின் அங்கீகாரம் பெறாத லேஅவுட்டில் உள்ளது. எனவே நகராட்சி, குப்பைகளை அகற்றவோ, அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவோ இயலாது என்று அடிக்கடி கூறிவந்தனர். ஆனால் அண்மையில் இந்த லேஅவுட்டுக்கு நகராட்சி அங்கீகாரம் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த வணிக வளாகம் குப்பை மேடுகள் நிறைந்தது என்ற அந்தஸ்தில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.

இது குறித்து அப்பகுதி நகராட்சி உறுப்பினர் கூறுகையில்,

                      "இந்த தனியார் வணிக வளாகத்துக்கு 6 மாதங்களுக்கு முன், நகராட்சி அங்கீகாரம் அளித்து உள்ளது. சாலைகள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. எனவே தனியார் வணிக வளாகமாக இருந்த போதிலும், அங்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தீர்மானித்து உள்ளது நகராட்சி. குப்பைகளும் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும் என்றார்.தனியார் வணிக வளாகத்துக்கு, நகராட்சி அங்கீகாரம் அளித்த பிறகும், வணிக வளாகம் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது என்பது, மக்களுக்கு மேலும் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

Read more »

வெள்ளி, ஜனவரி 28, 2011

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம்


அரசு பஸ்களின் இயக்கம் குறைந்ததால், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம்.
பண்ருட்டி:
 
          கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை பண்ருட்டி திமுகவினர் நிர்பந்தித்தும், மிரட்டியும் பஸ்சை  இயக்க செய்தனர்.  தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய அறிவித்திருந்தனர். 
 
            இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. பண்ருட்டி பணிமனையில் பணியாற்றும் தொமுச தொழிற்சங்கத்தினர் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் இயக்க வேண்டிய பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நின்றிருந்தன.  இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.  ÷இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா.இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.எஸ்.எம்.தணிகைசெல்வம் உள்ளிட்ட திமுகவினர் பண்ருட்டி பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மதியம் 2 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கியதாக தெரிகிறது.  
 
கடலூர் 
 
            கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. எம்.எல்.எஃப். உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 40 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக, தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.  இதனால் அந்த வழித் தடங்களில் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 

Read more »

திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

 இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:  

             கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே கடலூர் பஸ் நிலையம், திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் உள்ளன. அந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட், ரயில் வரும் நேரத்தில் மூடப்படும்போது, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு, அந்தச் சாலையில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

            நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, அந்தப் பாலம் அமைக்கப்பட்டால், அதில், இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். மினி வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்தச் சாலை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும்.  இதனால், அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டு வியாபாரமும் குறைந்துவிடும். 

              எனவே, எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கடலூர் பஸ் நிலையத்தின் பின் புறம், சுரங்கப்பாலம் அமைக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் மாற்றுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து 15,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார்.  பாலம் அமைப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கொடுத்த திட்ட வரைவு குறித்து ஆட்சியர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

             லாரன்ஸ் சாலையில் பாலம் அமைந்தால் ஏற்படும் இடையூறுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிலையில், அந்தச் சாலையில் பாலம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தச் சாலையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

              அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior