உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

அசுத்தத்தின் பிடியில் கடலூர் மையப் பகுதி

கடலூர்:

               குப்பைகள் நிறைந்த அசுத்தத்தின் பிடியில் கடலூர் நகரின் மையப்பகுதி சிக்கித் தவிக்கிறது. 

             கடலூர் பஸ் நிலையம் அருகே 200 வணிக நிறுவனங்களைக் கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துத்துக்குள் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள். இந்த வணிக வளாகம் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஆனால் நகராட்சி விதிகளுக்கு உள்பட்டு அமைக்கப்படவில்லை. மிகவும் குறுகலான சாலைகள் காரணமாக, ஏதேனும் தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதே மிகவும் கடினம்.

                 பல மாடிகளைக் கொண்ட லாட்ஜுகளும் இங்கு இடம்பெற்று உள்ளன. இந்த வணிக வளாகம் எப்போது பார்த்தாலும் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது. அசுத்தத்தின் உச்சத்தில் இருப்பது மட்டுமன்றி, இப்பகுதிக்குள் கட்டாயத்தின்பேரில்  வந்துபோகும் பொதுமக்கள், நிச்சயம் தொற்றுநோய்களுக்கு ஆளாகும் அபாயமும் நீடித்து வருகிறது. இந்த வணிக வளாகத்துக்குள் ஏராளமான மொத்த வணிகம் செய்யும் பூக்கடைகள் உள்ளன. அவைகள் வெளியேற்றும் அழுகல் பூக்களின் கழிவுகளால், ஏற்படும் சுகாதாரக் கேடுகள்தான் மிக அதிகம் என்று, பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

                    எனினும் இது குறித்து நகராட்சி அதிகாரிகளைக் கேட்கும் போதெல்லாம், இந்த தனியார் வணிக வளாகம் நகராட்சியின் அங்கீகாரம் பெறாத லேஅவுட்டில் உள்ளது. எனவே நகராட்சி, குப்பைகளை அகற்றவோ, அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவோ இயலாது என்று அடிக்கடி கூறிவந்தனர். ஆனால் அண்மையில் இந்த லேஅவுட்டுக்கு நகராட்சி அங்கீகாரம் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த வணிக வளாகம் குப்பை மேடுகள் நிறைந்தது என்ற அந்தஸ்தில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயம்.

இது குறித்து அப்பகுதி நகராட்சி உறுப்பினர் கூறுகையில்,

                      "இந்த தனியார் வணிக வளாகத்துக்கு 6 மாதங்களுக்கு முன், நகராட்சி அங்கீகாரம் அளித்து உள்ளது. சாலைகள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. எனவே தனியார் வணிக வளாகமாக இருந்த போதிலும், அங்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தீர்மானித்து உள்ளது நகராட்சி. குப்பைகளும் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படும் என்றார்.தனியார் வணிக வளாகத்துக்கு, நகராட்சி அங்கீகாரம் அளித்த பிறகும், வணிக வளாகம் குப்பை மேடாகத்தான் காட்சி அளிக்கிறது என்பது, மக்களுக்கு மேலும் வேதனை தரும் விஷயமாக இருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior