அரசு பஸ்களின் இயக்கம் குறைந்ததால், தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம்.
பண்ருட்டி:
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை பண்ருட்டி திமுகவினர் நிர்பந்தித்தும், மிரட்டியும் பஸ்சை இயக்க செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய அறிவித்திருந்தனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. பண்ருட்டி பணிமனையில் பணியாற்றும் தொமுச தொழிற்சங்கத்தினர் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காலையில் இயக்க வேண்டிய பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனையில் நின்றிருந்தன. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். ÷இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா.இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.எஸ்.எம்.தணிகைசெல்வம் உள்ளிட்ட திமுகவினர் பண்ருட்டி பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மதியம் 2 மணிக்கு பின்னர் பஸ்கள் இயக்கியதாக தெரிகிறது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. எம்.எல்.எஃப். உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 40 சதவீதம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக, தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதனால் அந்த வழித் தடங்களில் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக