உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குடிநீர் விநியோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடிநீர் விநியோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 30, 2011

சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9f3cdffa-b3e9-4ed3-a6c8-a8092c351368_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

               இதையடுத்து கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடிநீரில் மழை நீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

             இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவைபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று திங்கட்கிழமை கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை.

              கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து கோட்டாட்சியர் இந்துமதிக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கோட்டாட்சியர் கடலூரில் இருந்து வர தாமதமானதால் தாசில்தார் ராஜேந்திரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் தாசில்தாரிடம் உடனடியாக கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கூறினர்.

              இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் இந்துமதி சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும் தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.   காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமும் அணிவகுத்து நின்றன.

            மறியல் போராட்டம் கைவிட்ட பின்பும் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு: குடிநீர் வினியோகம் பாதிப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/cd88458d-3195-4c26-887c-b1ecdd0cf328_S_secvpf.gif
கடலூர்:

             கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.   கடலூர் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பள்ளி அருகே சாலையை அகலப்படுத்த நேற்று இரவு பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது.

              இதில் எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கடலூர் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். குடிநீர் சப்ளையை துண்டித்து குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.  இன்று காலையிலும் பணி தொடர்ந்தது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடலூரில் பல வார்டுகளில் குடிதண்ணீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Read more »

புதன், ஆகஸ்ட் 17, 2011

என்.எல்.சியால் வடலூர் கருங்குழி கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/6f14af6b-ae3f-4f9d-8373-2ec24ba3052b_S_secvpf.gif
 
வடலூர்:
 
           வடலூர் கருங்குழி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஒத்தை தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அங்காளம்மன் கோவில் அருகே ஆழ்குழாய் கிணறும், குடிநீர் தேக்க தொட்டியும் உள்ளது.

              நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெடிவைப்பதால் இந்த குழாய் கிணறு சேதம் அடைந்துள்ளது. எனவே கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிக்க நல்ல குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாசு படிந்த குடிநீரை மக்கள் குடிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய குடிநீர் குழாய் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஆணையருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 
 
 
 
 

Read more »

புதன், ஆகஸ்ட் 10, 2011

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி அமைத்து தர பயணிகள் கோரிக்கை


கடலூர்:
 
         கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து போகிறார்கள். ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே குடியிருப்பில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள் தினமும் பாடாய்படுகிறார்கள். இப் பிரச்னையை போக்க நகராட்சி ஆவன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  
 
                 திருப்பாப்புலியூர் ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 2002-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்துக்குள், 3 நகராட்சி குடிநீர் இணைப்புகள் இருந்தன. அதன்பிறகு இந்த குடிநீர் இணைப்புகள் மூடப்பட்டதே குடிநீர் பிரச்னைகளுக்கு காரணம் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். 2004-ம் ஆண்டில் ஒரு இணைப்பு மட்டும் சரிசெய்யப்பட்டது. அதுவும் ஒரு மாதம் வரை குடிநீர் வழங்கியது. பின்னர் ஏனோ துண்டிக்கப்பட்டு விட்டது.  இதுகுறித்து பலமுறை கடலூர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்கிறார்கள். 
 
                ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே அதிகாரிகள் தினமும், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நீர்தான் குடியிருப்புப் பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. ரயில் பயணிகளின் தேவைக்கு சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பப் படுகின்றன. தண்ணீர் டிராக்டர் வருவதில் தாமதம் ஏற்பட்டாலோ, வராமல் போனாலோ அனைவரின் பாடும் அவஸ்தைதான்.  மேலும் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்து நிரப்பப்படும் குடிநீரை, அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் செல்வதுடன், குளிர்ந்த நீர் வழங்கும் ஃபிரீசரையே உடைத்து விட்டனராம். இதனால் ரயில் நிலையத்தில் அடிக்கடி குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது.  
 
                அண்மையில் ரயில்வே அதிகாரிகள் நகராட்சியைத் தொடர்பு கொண்டபோது 2002-ம் ஆண்டு முதல் இதுவரை உள்ள குடிநீர் பாக்கி கட்டணத்தை செலுத்தினால், குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனராம். ஆனால் அத்தொகையை செலுத்துவது சாத்தியம் அல்ல என்பதால், நகராட்சி குடிநீர் இணைப்பு பெறும் முயற்சியையே கைவிட்டு விட்டனராம்.  கடலூர் நகரில் மிகுந்த சிரமத்துடன்தான் மக்களுக்கு நகராட்சி குடிநீர் வழங்கி வருகிறது. எனினும் நகரில் பல இடங்களில், குடிநீர் அன்றாடம் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட விரோதமாகப் பல வீடுகளில், மோட்டார் வைத்து நகராட்சிக் குடிநீரை உறிஞ்சுகிறார்கள். 
 
                  ரயில் பயணிகளும், ரயில்வே குடியிருப்பில் வசிப்போரும் கடலூர் நகர மக்கள்தானே. அவர்களுக்குக் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுப்பது ஏன் என்கிறார் தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், கடலூர் ரயில் பணிகள் நலச் சங்கத் தலைவருமான முனைவர் பி.சிவகுமார்.  
 
                திருப்பாப்புலியூர் ரயில் நிலைய குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டோம் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

வீராணம் குடிநீர் இன்றுமுதல் சென்னைக்கு விநியோகம்

வீராணம் ஏரி நீரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்

நெய்வேலி:

          நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து நீரேற்று நிலையத்திலிருந்து வீராணம் நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணி மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது. 

                இதை நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சென்னை நகர மக்களுக்கு வீராணம் குடி நீர் விநியோகிக்கும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் மீண்டும் தொடங்கப்படும் என அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.  கடந்த 2004-ம் ஆண்டு ரூ. 720 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் மூலம் 13. 288 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வீராணம் ஏரியில் நீர் இருப்பு குறைந்தததாலும், தூர்வாரும் பணி நடைபெற்றதாலும், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் இந்த ஆ மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. 

               இதையடுத்து இம்மாதம் 10-ம் தேதி வீராணம் ஏரியிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வடக்குத்து சுத்திகரிப்பு நிலையம் வரை 22 கி.மீ. நீளமுள்ள குடிநீர் குழாய் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, வடக்குத்து நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரை சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணியினை திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.  இதன் மூலம் நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வழங்கப்படவிருப்பதாகவும், திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு அனுப்பப்பட்ட இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் வழியாக 6 மணி நேரத்தில் சென்னை போரூரை சென்றடையும் என்றும், அதன்பின்னர் சென்னை நகர பகுதிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

             சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், மற்றும் வீராணம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் 6095 மில்லியன் கன அடி நீர் உள்ளது.  இது மொத்த கொள்ளளவில் 48.67 சதவீதமாகும். இதன்மூலம் சென்னைக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலும் எனவும் அமைச்சர் கே.பி.முனுசாமி மேலும் தெரிவித்தார். 





Read more »

வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் அடிக்கடி பழுதாகும் ஆழ்குழாய்க் கிணறு






பண்ருட்டி:

           பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஆழ்குழாய்க் கிணறு போர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் தண்ணீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

            பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்குண்டான நடவடிக்கை கூட நகர நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி கவுன்சிலர் துரை.ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறினார். பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் கஸ்தூரிபாய் வீதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய்க் கிணறு மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

             கடந்த ஒரு மாதகாலமாக இந்த ஆழ்குழாய்க் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால், கஸ்தூரிபாய் வீதி, பனங்காட்டு தெரு, தனபால்செட்டி தெரு, சோமேஸ்வரன் கோயில் வீதி, பழைய மார்க்கெட் வீதி, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதி அடைந்து வருகின்றனர்.

             கஸ்தூரிபாய் வீதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட போர் மூலம் நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது. இதில் இருந்த 12 எச்.பி. மோட்டார் பழுதடைந்ததைத் தொடர்ந்து நகர நிர்வாகம் 6 எச்.பி. மோட்டாரை பொருத்தியது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. மேலும் பழுதி நீக்கி பொருத்தப்படும் மோட்டார்கள் ஒரு சில நாள்களிலேயே பழுதடைந்து விடுகிறது.

                ஆழ்குழாய்க் கிணற்றில் என்ன குறை? ஏன் அடிக்கடி மோட்டார் பழுதடைகிறது? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. திட்டமிடப்படாத பணியால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரையமாகிறது. கடந்த ஒரு மாத்தில் மட்டும் இந்த போது பலமுறை பழுதாகிவிட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

            இது குறித்து நகராட்சி அதிகாரிகளோ, நகரமன்ற உறுப்பினர்களோ கண்டுக் கொள்ளவில்லை. ஆழ்குழாய்க் கிணறு இல்லாதவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுகின்றனர். நகர நிர்வாகம் லாரி மூலம் கூட தண்ணீர் விநியோகம் செய்ய முன்வரவில்லை என வேதனையுடன் கூறினர்.

 இது குறித்து நகரமன்ற உறுப்பினர் துரை.இராமகிருஷ்ணன் கூறியது: 

            "இப்பகுதியில் உள்ள போர் சரியில்லை, இதனால் அடிக்கடி பழுதடைகிறது. இது குறித்து நகர நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தண்ணீர் விநியோகிக்கும் லாரியும் பழுதாகி உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிய வருகிறது' என கூறினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior