உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் அடிக்கடி பழுதாகும் ஆழ்குழாய்க் கிணறு






பண்ருட்டி:

           பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஆழ்குழாய்க் கிணறு போர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் தண்ணீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

            பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்குண்டான நடவடிக்கை கூட நகர நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி கவுன்சிலர் துரை.ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறினார். பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் கஸ்தூரிபாய் வீதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய்க் கிணறு மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

             கடந்த ஒரு மாதகாலமாக இந்த ஆழ்குழாய்க் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால், கஸ்தூரிபாய் வீதி, பனங்காட்டு தெரு, தனபால்செட்டி தெரு, சோமேஸ்வரன் கோயில் வீதி, பழைய மார்க்கெட் வீதி, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதி அடைந்து வருகின்றனர்.

             கஸ்தூரிபாய் வீதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட போர் மூலம் நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது. இதில் இருந்த 12 எச்.பி. மோட்டார் பழுதடைந்ததைத் தொடர்ந்து நகர நிர்வாகம் 6 எச்.பி. மோட்டாரை பொருத்தியது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. மேலும் பழுதி நீக்கி பொருத்தப்படும் மோட்டார்கள் ஒரு சில நாள்களிலேயே பழுதடைந்து விடுகிறது.

                ஆழ்குழாய்க் கிணற்றில் என்ன குறை? ஏன் அடிக்கடி மோட்டார் பழுதடைகிறது? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. திட்டமிடப்படாத பணியால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரையமாகிறது. கடந்த ஒரு மாத்தில் மட்டும் இந்த போது பலமுறை பழுதாகிவிட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

            இது குறித்து நகராட்சி அதிகாரிகளோ, நகரமன்ற உறுப்பினர்களோ கண்டுக் கொள்ளவில்லை. ஆழ்குழாய்க் கிணறு இல்லாதவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுகின்றனர். நகர நிர்வாகம் லாரி மூலம் கூட தண்ணீர் விநியோகம் செய்ய முன்வரவில்லை என வேதனையுடன் கூறினர்.

 இது குறித்து நகரமன்ற உறுப்பினர் துரை.இராமகிருஷ்ணன் கூறியது: 

            "இப்பகுதியில் உள்ள போர் சரியில்லை, இதனால் அடிக்கடி பழுதடைகிறது. இது குறித்து நகர நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தண்ணீர் விநியோகிக்கும் லாரியும் பழுதாகி உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிய வருகிறது' என கூறினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior