உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பலா விளைச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலா விளைச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 21, 2011

பண்ருட்டியில் 55 கிலோ எடை கொண்ட பலாப்பழம்: கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

 
பண்ருட்டி : 

     கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நேற்று அதிக எடை கொண்ட பலாப்பழம் விற்பனைக்கு வந்தது.

       பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது பலாப்பழம் தான். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் பலாப்பழம் பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்தாலும், பழத்தின் சுவை, நிறம் முதலானவை பண்ருட்டி பலாப்பழம் போல் வராது. இந்தாண்டு கடந்த மார்ச் துவங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை பலாப்பழ சீசன் களைகட்டி வருகிறது. மார்ச்சில் ஒரு கிலோ பலாப்பழம் 12 ரூபாய்க்கும், மே மாதம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது சீசனை முன்னிட்டு கிராமங்களில் இருந்து அதிகளவில் பலாப்பழம் விற்பனைக்கு வருவதால், ஒரு கிலோ 5 ரூபாய் என விலை குறைந்துள்ளது.

         இதற்கிடையே நேற்று பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரது நிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பலாப்பழம் மிகப்பெரிய சைசில், 55 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை வியாபாரிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து வேளாண்மை விதைச் சான்று அலுவலர் ஹரிதாஸ் கூறுகையில், 

          "அமெரிக்கா நாட்டில் உள்ள ஹாவாய் தீவில் 35 கிலோ எடை கொண்ட பலாப்பழம் அதிக எடை கொண்டது என, கின்னசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பண்ருட்டி பகுதியில் சராசரியாக 10 கிலோ முதல் 90 கிலோ எடை வரை பலாப்பழங்கள் விற்பனைக்கு வருகிறது' என்றார். அதிக எடை கொண்ட பலாப்பழம் பண்ருட்டி பகுதிகளில் உற்பத்தியாகிறது என்பதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் ஆர்வமாக உள்ளது. 



Read more »

வியாழன், மே 26, 2011

அமோக விற்பனையில் பண்ருட்டி பலாப்பழங்கள்


காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள பண்ருட்டி பலாப்பழங்கள்.
 
               காஞ்சிபுரத்தில் பண்ருட்டி பலாப்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ராஜாஜி மார்கெட் பகுதியில் மட்டும் மாதத்துக்கு ரூ.4 லட்சம் அளவில் பலாப்பழங்கள் விற்பனை நடைபெறுகிறது.
 
                காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதையடுத்து தற்போது விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்துள்ளது. பெரும்பாலான பழங்கள் பண்ருட்டி அருகே உள்ள கீழகுப்பம் பகுதியில் இருந்தே விற்பனைக்கு வந்துள்ளன. இங்கு ஒரு பலாப்பழம் ரூ.60 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. கீழகுப்பம் மற்றும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பலாப்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் மாதத்துக்கு 40 டன்கள் வரை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
              ராஜாஜி மார்க்கெட்டில் இருந்து காஞ்சிபுரம் நகரப் பகுதி மட்டுமின்றி பெருநகர், சிறுகாவேரிப்பாக்கம், வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பலாப்பழங்கள் கால் கிலோ ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மொத்தமாக பலாப்பழம் விற்கும் வியாபாரிகள் மட்டுமின்றி சிறு வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கிறது.
 
இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை குறித்து ராஜாஜி மார்க்கெட் பகுதியில் பலாப் பழம் விற்பனையில் ஈடுபட்டுள்ள கீழ்குப்பம் வெற்றிவேல் மற்றும் பூவராகவன் ஆகியோர் கூறுகையில், 
 
           "இப்பகுதிக்கு 40 டன் பலாப்பழம் வருகிறது. ஒரு டன் பலாப்பழத்தை ரூ.8000 அளவுக்குதான் விற்பனை செய்ய முடியும். கீழகுப்பம் பகுதியில் பலாப்பழங்களை நாங்கள் சிறிய பழம் ரூ.40-க்கும், பெரிய பழம் ரூ.70-க்கும் வாங்கி வருகிறோம். அப் பழங்களை இங்கு கொண்டு வந்து ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறோம். எங்கள் லாபத்தில் பெரும் பகுதி லாரி வாடகைக்கே சென்றுவிடும். ஆனாலும் தற்போது பலாப்பழம் வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கணிசமான விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 
 
 

Read more »

புதன், மே 04, 2011

பண்ருட்டியில் பலா சீசன் தொடங்கியது


பண்ருட்டியில் இருந்து வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பலாப்பழங்கள்.
 
பண்ருட்டி:
 
           பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சீசன் தொடக்கம் என்பதால் சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
              பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடில ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் சுவை அதிகம் கொண்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்புவர். பண்ருட்டியில் இருந்து நாள்தோறும் டன் கணக்கிலான பலாப்பழங்கள் லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு ஏழில் கூறியது: 
 
               மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை பலாப்பழம் சீசன். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளதா, பூச்சி தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக் கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தைகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.30 முதல் 40 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர். மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தால் போல் 20 முதல் 50 பிச்சுகள் வரைவிட்டுவிட்டு. எஞ்சிய பிஞ்சுகளை கழித்துவிடுவர். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.
 
இது குறித்து பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ளவர்கள் கூறியது: 
 
               விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று விற்று கொடுத்து வருகின்றோம். இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கழிவு பெற்றுக் கொள்வோம். பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்து வருகின்றோம். மும்பையில் பலாப்பழத்தில் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Read more »

வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடக்கம்


பலாப்பழப் பருவம் தொடங்கியதை யொட்டி, கடலூர் அருகே ராமாபுரத்தில் காய்த்துக் குலுங்கும் பலா மரம்.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் பலாப்பழப் பருவம் தொடங்கி விட்டது. பலாப்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. 

             கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கரில் பலா மரங்கள் உள்ளன. இதில் பண்ருட்டி தாலுகாவில் மட்டும் 2,400 ஏக்கரில் உள்ளன. மேலும் தனிப் பயிராக இல்லாமல், மற்ற பயிர்கள் உள்ள நிலங்களில், ஓரமாக நடப்பட்ட பலா மரங்கள், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளன.  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 75 ஆயிரம் டன் பலாப்பழங்கள் உற்பத்தி ஆகின்றன. வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு பலாப்பழங்கள் அதிக அளவில் காய்த்து உள்ளன. தற்போது பலாப் பழங்கள் குறைந்த அளவில் வரத் தொடங்கி உள்ளன.  

                இவ்வாண்டு நோய்த் தாக்குதல் எதுவும் காணப்படவில்லை. எனவே விவசாயிகள் நல்ல மகசூலை எதிர்பார்க்கிறார்கள் என்று, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக் கலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 

            "கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கருக்கு மேல் பலா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டு நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த, முன்னேற்பாடாக பல விவசாயிகள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்களில் மருந்து தெளித்து உள்ளனர்.  இதனால் நோய்த் தாக்குதல் இன்றி பலாமரங்கள் பெருமளவில் காய்த்து உள்ளன. ஏப்ரல் மாதத்தில் 25 சதவீதமும், மே மாதத்தில் 50 சதவீதமும், ஜூன் மாதத்தில் 25 சதவீதமும் அறுவடை செய்யப்படும்.  

             ஹெக்டேருக்கு சராசரியாக 40 முதல் 50 டன்கள் வரை பலாப்பழங்கள் கிடைக்கும். நன்றாக பராமரிக்கப்பட்டால் ஹெக்டேருக்கு 100 டன்கள் வரைகூட கிடைக்கும். பண்ருட்டி தாலுகா விவசாயிகள் 100 டன்கள் வரை பலாப்பழங்களை விளைவிக்கிறார்கள். கோடையில் பலத்த மழை இல்லாமல் இருந்தால், இந்த ஆண்டு பலாப்பழ உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார் அவர்.

Read more »

சனி, ஜூலை 03, 2010

பண்ருட்டியில் ஐஸ்கிரீம் தயாரிக்க 5 டன் பலாப்பழம் கொள்முதல்

பண்ருட்டி:

               பண்ருட்டி பலாப்பழம் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்க மும்பை நிறுவனம் நேற்று பலாப்பழம் கொள்முதல் செய்தனர். மும்பையில் காமத்ஸ் அவர் டைம்ஸ் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மாம்பழம், அன்னாச்சி, ஆப்பிள், சப்போட்டா, தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பழங்கள் மூலம் இயற்கையான முறையில் 25 வகையான ஐஸ்கிரீம் தயாரித்து வருகிறது.

                மேலும் தற்போது கூடுதலாக பலாப்பழம் மூலம் கூழ் தயாரிக்கப்பட்டு ரசாயன, கலர் கலப்பு இல்லாத முற்றிலும் இயற்கை பழ ஐஸ்கிரீம் தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி பலாப்பழத்திற்கு முக்கிய நகரமாக விளங்கும் பண்ருட்டியில் பலாப்பழம் கொள்முதல் செய்ய கம்பெனி நிர்வாக இயக்குனர் ரகுநந்தன் சீனுவாசகாமத், இயக்குனர் புஷ்பலதா காமத் ஆகியோர் பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ் மூலம் பண்ருட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலா தோட்டங்களை நேற்று பார்வையிட்டு ஐந்து டன் பலாப் பழங்கள் கொள்முதல் செய்தனர்.

இதுகுறித்து உதவி வேளாண்மை இயக்குனர் ஹரிதாஸ் கூறுகையில்,

               "பழுத்த பலாச் சுளையில் இருந்து அல்வா, பலா ஜூஸ், ஐஸ்கிரீம், குல்பி மிட்டாய், பலாப்பழ வற்றல், பலாப் புட்டு, பலா ஒயின், ஜாம் ஆகியவை தயாரிக்கலாம். ஆனால் பலாப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்துவதால் பலா விவசாயிகள் மேலும் பயன்பெற முடியாத நிலை உள்ளது. தொழில் முனைவோர்கள் பலாப்பழம் மூலம் ஜூஸ் உள்ளிட்டவைகள் தயாரிக்க முன்வரவேண்டும்' என்றார்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டி பலாவுக்கு அதிக "கிராக்கி'


பண்ருட்டி:
 
                பலாப் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜாக்கலின் எனும் நுண்பொருள் மனித குலத்தை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் திறனுள்ளதாக பிரான்சு நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார். 
 
                  பழ வகையில் அதிக எடையும் மகசூல் திறனும் கொண்டது பலா. பண்ருட்டி பலா பழத்தில் அதிக சுவை உள்ளதால் இதற்கு தனிப் பெருமை உண்டு. ஆரம்ப காலத்தில் வரப்பு ஓர பயிராகவும், வீட்டுத் தோட்டத்திலும், நிழல் தரும் மரமாகவும் அறை கலன்கள் மற்றும் இசைக் கருவிகள் செய்வதற்காகவும் வளர்க்கப்பட்டது. பலா மரத்தின் சிறப்புகளையும், அதிக வருவாய் ஈட்டும் திறன், குறைந்த பராமரிப்புச் செலவுகளை உணர்ந்த விவசாயிகள் தற்போது ஏக்கர் கணக்கில் பயிரிட்டு பண்ருட்டிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
 
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்கநர் பி.ஹரிதாஸ் கூறியது: 
 
                   வறட்சி மற்றும் கனமழை பகுதியில் வளரும் பலா மரங்கள் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக பலன் தரக்கூடியவை. மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிற சுளைகளைக் கொண்ட பல ரக மரங்கள் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த மரம் 600 காய்களுக்கு மேல் காய்க்கும். மேலும் பலா மரம் விலை மதிப்பு மிக்கது. கேரளம், கர்நாடகம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலாச்சுளை, பிஞ்சு, முற்றாத காய் ஆகியவற்றில் இருந்து பலா ஜூஸ், அல்வா, அப்பளம், வற்றல், மாவு ஆகியவை தயாரித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.÷தமிழகத்தில் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவதற்கான பணிகளை விவசாயத் துறையின் மேற்கொண்டுள்ளனர். தமிழகச் சந்தையில் பலாவின் விலை ஏற்றத் தாழ்வுகளை கொண்டுள்ளது. சாகுபடியாளர்கள் பயன்பெற வேண்டுமானால் பலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும். விற்பனை வாய்ப்பை கண்டறிய கூட்டுறவு சங்கத்தின் மூலம் தொழிற்சாலைகளை உருவாக்க தொழில் முனைவோர் உருவாக வேண்டும்.÷மேலும் விபரங்களுக்கு பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்கநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடையலாம் என பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior