பண்ருட்டி :
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நேற்று அதிக எடை கொண்ட பலாப்பழம் விற்பனைக்கு வந்தது.
பண்ருட்டி என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது பலாப்பழம் தான். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் பலாப்பழம் பயிரிடப்பட்டு விற்பனைக்கு வந்தாலும், பழத்தின் சுவை, நிறம் முதலானவை பண்ருட்டி பலாப்பழம் போல் வராது. இந்தாண்டு கடந்த மார்ச் துவங்கி ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை பலாப்பழ சீசன் களைகட்டி வருகிறது. மார்ச்சில் ஒரு கிலோ பலாப்பழம் 12 ரூபாய்க்கும், மே மாதம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது சீசனை முன்னிட்டு கிராமங்களில் இருந்து அதிகளவில் பலாப்பழம் விற்பனைக்கு வருவதால், ஒரு கிலோ 5 ரூபாய் என விலை குறைந்துள்ளது.
இதற்கிடையே நேற்று பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரது நிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பலாப்பழம் மிகப்பெரிய சைசில், 55 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை வியாபாரிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து வேளாண்மை விதைச் சான்று அலுவலர் ஹரிதாஸ் கூறுகையில்,
"அமெரிக்கா நாட்டில் உள்ள ஹாவாய் தீவில் 35 கிலோ எடை கொண்ட பலாப்பழம் அதிக எடை கொண்டது என, கின்னசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பண்ருட்டி பகுதியில் சராசரியாக 10 கிலோ முதல் 90 கிலோ எடை வரை பலாப்பழங்கள் விற்பனைக்கு வருகிறது' என்றார். அதிக எடை கொண்ட பலாப்பழம் பண்ருட்டி பகுதிகளில் உற்பத்தியாகிறது என்பதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் ஆர்வமாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக