காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள பண்ருட்டி பலாப்பழங்கள்.
காஞ்சிபுரத்தில் பண்ருட்டி பலாப்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ராஜாஜி மார்கெட் பகுதியில் மட்டும் மாதத்துக்கு ரூ.4 லட்சம் அளவில் பலாப்பழங்கள் விற்பனை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதையடுத்து தற்போது விற்பனைக்கு பலாப்பழங்கள் வந்துள்ளது. பெரும்பாலான பழங்கள் பண்ருட்டி அருகே உள்ள கீழகுப்பம் பகுதியில் இருந்தே விற்பனைக்கு வந்துள்ளன. இங்கு ஒரு பலாப்பழம் ரூ.60 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. கீழகுப்பம் மற்றும் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பலாப்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதியில் மாதத்துக்கு 40 டன்கள் வரை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ராஜாஜி மார்க்கெட்டில் இருந்து காஞ்சிபுரம் நகரப் பகுதி மட்டுமின்றி பெருநகர், சிறுகாவேரிப்பாக்கம், வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பலாப்பழங்கள் கால் கிலோ ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மொத்தமாக பலாப்பழம் விற்கும் வியாபாரிகள் மட்டுமின்றி சிறு வியாபாரிகளுக்கும் லாபம் கிடைக்கிறது.
இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை குறித்து ராஜாஜி மார்க்கெட் பகுதியில் பலாப் பழம் விற்பனையில் ஈடுபட்டுள்ள கீழ்குப்பம் வெற்றிவேல் மற்றும் பூவராகவன் ஆகியோர் கூறுகையில்,
"இப்பகுதிக்கு 40 டன் பலாப்பழம் வருகிறது. ஒரு டன் பலாப்பழத்தை ரூ.8000 அளவுக்குதான் விற்பனை செய்ய முடியும். கீழகுப்பம் பகுதியில் பலாப்பழங்களை நாங்கள் சிறிய பழம் ரூ.40-க்கும், பெரிய பழம் ரூ.70-க்கும் வாங்கி வருகிறோம். அப் பழங்களை இங்கு கொண்டு வந்து ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறோம். எங்கள் லாபத்தில் பெரும் பகுதி லாரி வாடகைக்கே சென்றுவிடும். ஆனாலும் தற்போது பலாப்பழம் வாங்குவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கணிசமான விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக