உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பெட்ரோல் விலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெட்ரோல் விலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமின்றி தவிக்கும் தனியார் பேருந்துப் பணியாளர்கள்

கடலூர்:

          எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்கள் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

              தனியார் நிறுவனங்களில் மூலப்பொருள்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, உற்பத்தியான பொருள்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் போகும் நிலை உள்ளிட்ட பிரச்னைகள் எழும்போதெல்லாம் முதலில் கை வைப்பது, ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் வேலைப்பளுவை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள்தான் என்பது இயல்பான விஷயம்.அந்த வகையில் தற்போது தனியார் பஸ் தொழிலாளர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

            தனியார் பஸ் கட்டணம் 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.50. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 44.85.அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்வு இல்லை என்பது, மக்களை திருப்திப்படுத்தவும், அவர்கள் அரசு மீது எரிச்சல் அடையாமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். அரசு பஸ்களில் கட்டணத்தை உயர்த்தாவிடினும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மறைமுகமாக வழங்கப்படும் மானியம், மக்களின் வரிப்பணம்தான்.ஆனால் நஷ்டத்தை ஈடுகட்டும் நடவடிக்கைகளுக்கு, தனியார் பஸ் முதலாளிகள் மானியமாக, தனது ஊழியர்களின் ஊதியத்தைத்தான் உறிஞ்சுகிறார்கள் என்கின்றனர் தனியார் பஸ் தொழிலாளர்கள்.

          கடலூர் மாவட்டத்தில் 450 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களில் ரூ. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.டீசல் விலை, டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்த்தப்படாதபோது, தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வெட்டு விழுந்தது ஊக்கத்தொகையில்தான். நாளொன்றுக்கு ரூ. 500-க்கு மேல் வசூல் ஆகும் ஒவ்வொரு ரூ. 100-க்கும் ரூ. 1 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆனால்தான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாற்றிவிட்டனர். 

               இதனால் மிகக் குறைந்த ஊக்கத்தொகைதான் கிடைக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.மாதம் 13 நாள்கள் வேலைக்கு, நாளொன்று பஸ் ஓட்டுநர்களுக்கு ரூ. 485-ம் நடத்துநர்களுக்கு ரூ. 475-ம் ஊதியமாக வழங்க வேண்டும் என்கிறது, தமிழக அரசின் குறைந்தபட்ச கூலிச்சட்டம்.ஆனால் தனியார் பஸ் முதலாளிகள் தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வழங்குவது ரூ. 350 முதல் ரூ. 375 வரைதான். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் ஆனதும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.பல தனியார் பஸ் முதலாளிகள் மிகக் குறைந்த தொகையையே போனசாக  வழங்குகிறார்கள், சிலர் போனஸ் வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் சங்க செயலர் பி.பண்டரிநாதன் கூறுகையில், 

            "எரிபொருள் விலையேற்றம், டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்களின் ஊதியம் பெரிதும் பறிக்கப்பட்டு வருகிறது.இதற்கு தீர்வுக் காண, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அல்லது டீசல், டயர் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.ஊதியம் வெகுவாகக் குறைந்து விட்டதன் காரணமாக, தொழிலாளர்கள் பலர் வேறுவழியின்றியே இத்தொழிலில் நீடிக்கிறார்கள். புதிதாக தனியார் பஸ் தொழிலாளர்களாகப் பணிபுரிய பலர் முன்வருவது இல்லை.

               தனியார் பஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுப் பிரச்னையில் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நலத்துறையும் தோற்றுப் போய்க் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் தனியார் பஸ் தொழிலாளர்களின் நிலை பெரும்பாலும் இதேதான்' என்றார்.
















Read more »

சனி, ஜூலை 03, 2010

பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

கடலூர்: 

              பொது வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நடந்தது. 

கடலூர்: 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

                  "வரும் 5ம் தேதி அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள், பஸ்கள், ரயில்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விழுப்புரம்: 

கலெக்டர் பழனிசாமி பேசுகையில், 

                "தேவையின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஏதேனும் அசம் பாவிதங்கள் நடந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 222656, காவல் துறை கட்டுப் பாட்டு அறை 04146 - 222172, 222174 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

Read more »

வெள்ளி, ஜூலை 02, 2010

பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு


                       அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது,   யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய  அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் ஈடுபட முடிவு செய்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் போது நிகழும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

                 இந்தக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொது வேலைநிறுத்தத்தின் போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு ஆகியன பராமரிக்கப்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.  முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

               மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.   முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.  ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read more »

புதன், ஜூன் 30, 2010

ஜூலை 5-ல் கடையடைப்பு - எதிர்க்கட்சிகள் அழைப்பு


            பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி நாடு முழுக்க கடையடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
                     ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து வருகின்றன. விலைவாசி உயர்வு குறித்து முதலமைச்சர்களின் மாநாடு பிரதமர் தலைமையில் 6.2.2010 அன்று நடைபெற்றதே தவிர, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.  மாறாக, விலைவாசி மேலும் உயர்வதற்கான வழிகளைத் தான் தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

             இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு முடிந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மூன்று முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருள்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போனால், அனைத்துப் பொருள்களின் விலைகளும் மேலும் உயர்ந்து கொண்டே போகுமே தவிர குறையாது. இந்த முறை பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.  இது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.  டீசல் விலையையும் இது போன்று உயர்த்திக் கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

                  மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பின் காரணமாக லாரி வாடகை, சரக்குக் கட்டணம், வேன் வாடகை, போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயரும். இதனையடுத்து, உணவுப் பொருள்கள் உட்பட, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி, வேளாண் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தனது முழு ஆதரவை அளித்திருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

                மேலும், இந்த விலை ஏற்றத்திற்காக மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் மு.க. அழகிரி கலந்து கொண்டு இந்த விலையேற்றத்திற்கு முழு ஆதரவு அளித்திருக்கிறார். பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது மிகப் பெரிய நிதிச் சுமையை மத்திய அரசும், மாநில அரசும் திணித்துள்ளன.  இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கின்றனர்.  இந்த விலை உயர்வுக்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதோடு, இந்த விலை உயர்வுக்குக் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க. மாநில அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                    மேலும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசில் அங்கம் வகிக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளருடன் ஆலோசித்து எடுத்த முடிவின்படி, எதிர்க்கட்சிகள் இணைந்து ஜூலை 5-ம் தேதி (திங்கள்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட ஒத்தக் கருத்துடைய  கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.  மேலும், அனைத்து வியாபாரிகளும், தொழிற்சங்க அமைப்புகளும், வாகன உரிமையாளர்களும் மற்றும் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

பெட்ரோல் விலை உயர்வு:​ கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

               பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்,​​ சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.​ ​ ​25-ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்,​​ டீசல்,​​ மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன.​ இதற்குக் கண்டனம் தெரிவித்தும்,​​ விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,​​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ ​ ​

             ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுப்புராயன் தலைமை வகித்தார்.​ மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆளவந்தார்,​​ ஆட்டோ சங்கச் செயலாளர் பாபு,​​ நகரக்குழு உறுப்பினர்கள் தனசிங்,​​ மனோரஞ்சிதம்,​​ குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.​ ​ ​இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.​ மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.​ ​மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம்,​​ மாவட்ட துணைச் செயலாளர் எம்.சேகர்,​​ நகரச் செயலாளர் வி.குளோபு மற்றும் நிர்வாகிகள் நாகராஜன்,​​ விஸ்வநாதன்,​​ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில்...

                சிதம்பரம் தெற்குரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ எஸ்.ராஜா தலைமை வகித்தார்.​ நகரச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.​ நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம்,​​ ராமகிருஷ்ணன்,​​ ஞானமணி,​​ அமுதா,​​ சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

44 பேர் கைது:

               விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்,​​ பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன்,​​ வட்டக்குழு செயலர் கந்தசாமி,​​ வழக்கறிஞர் சந்திரசேகரன்,​​ சங்கரய்யா உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ் தொழிலாளர் சங்கம்கண்டனம்:

             பெட்ரோல், ​​ டீசல் விலை உயர்வுக்கு கடலூர் மாவட்டத் தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த விலை உயர்வு சராசரி மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது.​ ஆட்டோ,​​ டாக்ஸி,​​ சரக்கு வாகனங்களின் கட்டணம் கடுமையாக உயரும்.​ அதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்கள் மீது பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்.டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டியும்,​​ பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தாததாலும்,​​ தனியார் பஸ் உரிமையாளர்கள்,​​ தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுக்கிறார்கள்.​ எனவே விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பண்டரிநாதன் கோரியுள்ளார்.​ ​பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று,​​ இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்து உள்ளார்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை

கடலூர் : 

           மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கை:

                      நாடு முழுவதும் ஏற்கனவே விலைவாசி விண் ணுயர உயர்ந்ததால் நாட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மீண் டும் பெட்ரோல், டீசல் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எண்ணெய் கம்பெனி முதலாளிகளுக்கு சாதகமாக விலையை உயர்த்துவது என மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துவிட்டு மக்களை ஏமாற்றவும் திசை திருப்புவதாகவும் நாடகமாடி விட்டு தற்போது விலை உயர்வை அறிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. சமையல் காஸ் விலை 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior