உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு


                       அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது,   யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய  அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் ஈடுபட முடிவு செய்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் போது நிகழும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

                 இந்தக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொது வேலைநிறுத்தத்தின் போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு ஆகியன பராமரிக்கப்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.  முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

               மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.   முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.  ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior