பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 25-ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்குக் கண்டனம் தெரிவித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுப்புராயன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆளவந்தார், ஆட்டோ சங்கச் செயலாளர் பாபு, நகரக்குழு உறுப்பினர்கள் தனசிங், மனோரஞ்சிதம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், மாவட்ட துணைச் செயலாளர் எம்.சேகர், நகரச் செயலாளர் வி.குளோபு மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், விஸ்வநாதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் தெற்குரத வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.ராஜா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், ராமகிருஷ்ணன், ஞானமணி, அமுதா, சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
சிதம்பரத்தில்...
44 பேர் கைது:
விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், வட்டக்குழு செயலர் கந்தசாமி, வழக்கறிஞர் சந்திரசேகரன், சங்கரய்யா உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஸ் தொழிலாளர் சங்கம்கண்டனம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடலூர் மாவட்டத் தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த விலை உயர்வு சராசரி மக்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது. ஆட்டோ, டாக்ஸி, சரக்கு வாகனங்களின் கட்டணம் கடுமையாக உயரும். அதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்கள் மீது பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்.டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டியும், பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தாததாலும், தனியார் பஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்து உள்ள ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுக்கிறார்கள். எனவே விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் பண்டரிநாதன் கோரியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று, இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்து உள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக