பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி நாடு முழுக்க கடையடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் உயர்ந்து வருகின்றன. விலைவாசி உயர்வு குறித்து முதலமைச்சர்களின் மாநாடு பிரதமர் தலைமையில் 6.2.2010 அன்று நடைபெற்றதே தவிர, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக, விலைவாசி மேலும் உயர்வதற்கான வழிகளைத் தான் தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு முடிந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மூன்று முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் அனைத்துப் பொருள்களின் விலைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போனால், அனைத்துப் பொருள்களின் விலைகளும் மேலும் உயர்ந்து கொண்டே போகுமே தவிர குறையாது. இந்த முறை பெட்ரோல் மற்றும் டீசலைத் தவிர, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. இது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோலின் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. டீசல் விலையையும் இது போன்று உயர்த்திக் கொள்வதற்கான அறிவிப்பு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இது போன்ற அறிவிப்பின் காரணமாக லாரி வாடகை, சரக்குக் கட்டணம், வேன் வாடகை, போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயரும். இதனையடுத்து, உணவுப் பொருள்கள் உட்பட, அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி, வேளாண் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தனது முழு ஆதரவை அளித்திருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.
மேலும், இந்த விலை ஏற்றத்திற்காக மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் மு.க. அழகிரி கலந்து கொண்டு இந்த விலையேற்றத்திற்கு முழு ஆதரவு அளித்திருக்கிறார். பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது மிகப் பெரிய நிதிச் சுமையை மத்திய அரசும், மாநில அரசும் திணித்துள்ளன. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கின்றனர். இந்த விலை உயர்வுக்கு நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதோடு, இந்த விலை உயர்வுக்குக் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசுக்கும், இதற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க. மாநில அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோலின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசில் அங்கம் வகிக்காத எதிர்க்கட்சித் தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளருடன் ஆலோசித்து எடுத்த முடிவின்படி, எதிர்க்கட்சிகள் இணைந்து ஜூலை 5-ம் தேதி (திங்கள்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட ஒத்தக் கருத்துடைய கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், அனைத்து வியாபாரிகளும், தொழிற்சங்க அமைப்புகளும், வாகன உரிமையாளர்களும் மற்றும் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக