உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பொது வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்தது. 

                இந்நிலையில் மது பானங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுக்காப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.  டீசல் விலையாக் குறைக்க வேண்டும், காப்பீட்டுக் கட்டண உயர்வைத் திருப்பித் தர வேண்டும், சாலைகளில் சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும். மோட்டார் உதிரி பாகங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர். 

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

                 பால், காய்கறி, முட்டை மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு, வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  எனவே 80 சதவீத லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பஙகேற்கும் என்று கூறப்படுகிறது.  லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்கள் வருகை மற்றும் உற்பத்திப் பொருள்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் லாரிகள், என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுத்துச் செல்லும் லாரிகள், பெண்ணாடத்தை அடுத்த ஆலத்தியூர் மற்றும் தளவாய் ஆகிய இடங்களில் உள்ள இரு சிமென்ட் ஆலைகளுக்கு, கடலூர் மாவட்டம் வழியாக தினமும் இயக்கப்படும் 500 லாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.  

                இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.  மது பாட்டில்களும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் தற்போது இடம்பெற்று விட்டதால், டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.





Read more »

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடலூர்:

 
            தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது 3 நாள் வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தமாக வியாழக்கிழமை அறிவித்தனர்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளுக்காக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

            அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் சங்கத்தினரை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்து தங்களது போராட்டத்தைக் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாற்றி இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர். இதனால் மக்களுக்கான ஊரக வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.  வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஊரக வளர்ச்சித் துறை) வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

              ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆதவன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் சணமுக சிகாமணி, உதயகுமார், வீரபாண்டியன், தமிழ்மணி, பழநிசாமிநாதன், குமார், கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

செவ்வாய், நவம்பர் 23, 2010

கடலூரில் இன்று முழு அடைப்பு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

                பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி கடலூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

               40 கோடி ரூபாய் செலவில் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், இதுவரை முடிவு பெறவில்லை. இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூர் நகரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

                  முழு அடைப்பு போராட்டத்தால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. பேருந்து நிலையம் உட்பட பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ இயங்காததால் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பியுள்ளன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முழு அடைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேலை நிறு

Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

என்.எல்.சி. போராட்டம்: தமிழக MPக்கள், MLAக்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க முடிவு

பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ.  கடலூரில் நேற்று அளித்த பேட்டி:


                         ’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. 

                 சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை  கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

                 இந்த போராட்டம் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் நடைபெறும். பால் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம். மருந்து கடைகள் திறந்து இருக்கும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவில்லை என்றால் மேற்கு வங்காளம், நந்திகிராமத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினை ஏற்படும்.  உயிருக்கு ஆபத்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, முறையாக பயிற்சி இல்லாத கிராமப்புற இளைஞர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துகிறது. முறையான பயிற்சி பெறாததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

                      பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்’’என்று தெரிவித்தார்.

Read more »

சனி, ஜூலை 03, 2010

பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

கடலூர்: 

              பொது வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நடந்தது. 

கடலூர்: 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

                  "வரும் 5ம் தேதி அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள், பஸ்கள், ரயில்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விழுப்புரம்: 

கலெக்டர் பழனிசாமி பேசுகையில், 

                "தேவையின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஏதேனும் அசம் பாவிதங்கள் நடந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 222656, காவல் துறை கட்டுப் பாட்டு அறை 04146 - 222172, 222174 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

Read more »

வெள்ளி, ஜூலை 02, 2010

பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு


                       அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது,   யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய  அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் ஈடுபட முடிவு செய்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் போது நிகழும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

                 இந்தக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொது வேலைநிறுத்தத்தின் போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு ஆகியன பராமரிக்கப்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.  முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

               மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.   முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.  ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior