பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கடலூரில் நேற்று அளித்த பேட்டி:
’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த போராட்டம் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் நடைபெறும். பால் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம். மருந்து கடைகள் திறந்து இருக்கும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவில்லை என்றால் மேற்கு வங்காளம், நந்திகிராமத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினை ஏற்படும். உயிருக்கு ஆபத்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, முறையாக பயிற்சி இல்லாத கிராமப்புற இளைஞர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துகிறது. முறையான பயிற்சி பெறாததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்’’என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக