நெய்வேலி, டிச. 10:
சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் என்.எல்.சி. நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டார்.
40 ஆண்டுகள் பழமைவாய்ந்த என்எல்சி முதல் அனல்மின் நிலையத்தை படிப்படியாக மூடிவிட்டு, அதன் அருகில் முன்னர் கரிகட்டி ஆலை இயங்கி வந்த இடத்தில் 513 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5 ஆயிரத்து 596 கோடி மதிப்பீட்டில் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்க என்எல்சி திட்டமிட்டுள்ளது.
இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்கான நிலத்தில் 7 ஏக்கர் மாநில அரசு வசமும், மீதமுள்ள 506 ஏக்கர் என்எல்சி வசமே இருப்பதால் நிலம் கையகப்படுத்தும் எண்ணம் நிறுவனத்திற்கு இல்லை.
இப்புதிய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டியுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.÷இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் சேகர் மற்றும் என்எல்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.÷கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களில் பலர், ""அனல்மின் நிலையப் பணிகள் தொடங்கும்போது, சுற்றுப்புற கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். அனல்மின் நிலையம் அமையவுள்ள இடத்திற்கு அருகில் உள்ள கொல்லிருப்பு கிராமத்திற்கு என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும்'' என்று கோரினர்.÷இ தையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், "சுற்றுப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக என்எல்சி நிர்வாகம் புதிய வேலைவாய்ப்பு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்' என்றார்.
என் எல்சி நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, அனல்மின் நிலையம் அமையவுள்ள இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கிராம மக்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி அவற்றை வளர்க்க அறிவுறுத்தவேண்டும். என்எல்சி நில எடுப்புத்துறை சார்பில், நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தலைமையில் 3 மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்'' என்றார்.
மேலும் என்எல்சி சார்பில் இதுவரை சுற்றுப்புற கிராமங்களில் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான வெள்ளையறிக்கை வெளியிடுவதோடு, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடந்துமுடிந்த பணிகளின் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பேசிய என்எல்சி நில எடுப்புத்துறை பொதுமேலாளர் என்.எஸ்.ராமலிங்கம், மற்றும் திட்டத்துறை பொதுமேலாளர் வேதகிரி ஆகியோர், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இக் கூட்டத்தில் நிறுவன இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், வி.சேதுராமன், பொதுமேலாளர் அழகர், கார்த்திகேயன், சிவசங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக