சிதம்பரம்,அக்.30:
சிதம்பரம் நகராட்சியில் தலைவர் மற்றும் அதிகாரிகள் கடமைக்கு வேலை பார்க்கின்றனரே தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நகராட்சி ஒட்டுமொத்தமாக செயலிழந்துள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஆ.ரமேஷ் நகரமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
÷சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் பின்வருமாறு:
÷ஆ.ரமேஷ் (பாமக)- வெறும் தீர்மானங்களை நிறைவேற்றும் நகராட்சியாக சிதம்பரம் நகராட்சி உள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். கடந்த 13 மாதங்களாக போடப்பட்ட தீர்மானங்கள் மீது டெண்டர் விடப்பட்டு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
÷அப்படியிருக்கும் போது புதிதாக ஏன் தீர்மானம் போடுகிறீர்கள். எனவே அனைத்து தீர்மானங்களையும் ஒத்தி வைக்க வேண்டும். நகரில் மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறித்து நகர்நல அலுவலர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ÷போல்நாராயணன் தெரு, நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. டெண்டர் விட்டு 6 மாதமாகியும் அங்கு சாலை போடப்படவில்லை. 4 வீதிகளிலும் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் எரியவில்லை. அப்படியிருக்கும் போது நகரை எப்படி நீங்கள் அழகுபடுத்த முடியும்?
÷ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- எனது வார்டில் பலருக்கு மர்மக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மர்மகாய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
÷சிதம்பரம் நகராட்சியில் நகர்நல அலுவலர் தலைமையில் குழு அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசுக்களை ஒழிக்க கொசுமருந்து அடிக்க வேண்டும்.
÷அப்புசந்திரசேகரன் (திமுக)- நோபல் பரிசு பெற்ற சிதம்பரத்தில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நகரில் மகப்பேறு உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுத்து நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து விழா நடத்தி அளிக்க வேண்டும்.
÷முகமதுஜியாவுதீன் (காங்கிரஸ்)- ரூ.1-க்கு 1 கிலோ அரிசி கிடைக்கும் இவ்வேளையில் சிதம்பரம் நகராட்சி க்ட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ரூ.5-ம், மலம் கழிக்க ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
÷ஜி.மணிவேல் (அதிமுக)- தெருவிளக்குகள் எரியாததால் சிதம்பரம் நகரமே இருளில் மூழ்கியுள்ளது. நகர்மன்றத்தில் தீர்மானமங்கள் நிறைவேற்றப்படுகிறதே தவிர எந்த பணிகளும் நடைபெறவில்லை.
÷மு.ராஜலட்சுமி (விடுதலைச் சிறுத்தைகள்)- அம்பேத்கர் நகர் பின்புறம் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும். எனது வார்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதிமுக, மதிமுக
உள்ளிருப்பு போராட்டம்
நகரமன்றக் கூட்டம் முடிவுறும் வேளையில் அதிமுக உறுப்பினர் ஜெயவேல் பேச எழுந்தார். அப்போது நகர்மன்றத் தலைவர், கூட்டம் முடிந்ததாக பெல் அடித்து விட்டு சென்றுவிட்டார்.
÷இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஜி.மணிவேல், ஜெயவேல், சுப்பிரமணியம், மதிமுக உறுப்பினர் எல்.சீனுவாசன் உள்ளிட்ட 4 உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்து, "தலைவர் ஒழிக' என கோஷமிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆணையர் வந்து சமரசப்படுத்திய பின்னர் அவ்வுறுப்பினர்கள் கலைந்துச் சென்றனர். 4 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் 6 மணிக்கு தொடங்கப்பட்டு அதிமுக உறுப்பினர்களை பேசவிடாமல் கூட்டத்தை தலைவர் முடித்து விட்டுச் சென்றது கண்டனத்துக்குரியகது என உறுப்பினர் ஜி.மணிவேல் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக