கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குழி கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவரிடம் ஸ்ரீகாஞ்சி கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது55), சஞ்சீவி, ராமு ஆகிய 3 தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். திடீரென அவர்கள் வேலைக்கு வரவில்லை. மேலும் அவர்கள் ஆடம்பரமாக உலா வருவது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காண்டிராக்டர் துரை முனுசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
அப்போது கோவில் சுவரை இடித்தபோது தங்க காசு புதையல் கிடைத்ததாகவும், மொத்தம் 46 தங்க காசுகள் இருந்தது என்றும் அதனை 3 பேரும் பிரித்து கொண்டதாகவும் கூறினார். கோவிலில் கிடைத்த தங்க காசு புதையல் முழுவதையும் தன்னிடம் தரவேண்டும் என்று முனுசாமியை காண்டிராக்டர் மிரட்டினார்.
இதனால் பயந்துபோன முனுசாமி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறினார். ஆனால் போலீசார் முனுசாமி மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி அவரது புகாரை முதலில் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் முனுசாமி தன்னிடம் இருந்த 4 தங்க காசுகளை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து தங்க காசுகளை பரிசோதித்து பார்த்தனர்.
அப்போது அவை அனைத்தும் சுத்த தங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த தங்க காசுகள் 1620-ம் ஆண்டு மன்னர் காலத்து தங்க காசுகள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முனுசாமி மேலும் 15 தங்க காசுகளை தனது வீட்டில் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முனுசாமியுடன் காஞ்சிபுரத்துக்கு சென்று அவரது வீட்டில் இருந்த 15 தங்க காசுகளையும் மீட்டனர்.
நேற்று இரவு அந்த 19 தங்க காசுகளும் திருக்கோவிலூர் உதவி கலெக்டர் பிருந்தாவிடம் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. தங்க காசுகளுடன் தலைமறைவாகி உள்ள மற்ற தொழிலாளர்களான சஞ்சீவி, ராமு ஆகிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக