உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 22, 2010

பண்ருட்டி பகுதியில் மரணக்குழிகளாக மாறிய நெடுஞ்சாலைகள்?


பண்ருட்டி பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்துள்ள கடலூர் சாலை.
 
பண்ருட்டி:
 
                  பண்ருட்டி பகுதியில் கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடத்தில் ஏற்பட்டுள்ள மரணக்குழிகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையால் மேற்கண்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. 
 
                    இதில் வாகனங்கள் சென்று வந்ததால் பல்வேறு இடத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் வீரப்பெருமாள்நல்லூர் முதல் அங்குசெட்டிப்பாளையம் வரை பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இச்சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி துறையூரை சேர்ந்த இருவர் லாரி மோதி அதே இடத்தில் இறந்தனர். இந்த விபத்துக்கு மோசமான சாலையே காரணம் என்று கூறப்படுகிறது.
 
                 இதே சாலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகில், சாலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பெரிய கற்களை போட்டுள்ளனர். நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பள்ளத்தை மூட நெடுஞ்சாலை துறையோ, நகர நிர்வாகமோ இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த பள்ளத்தின் அருகிலேயே நகர்மன்றத் தலைவருக்கு சொந்தமான கடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                   இதேபோல் பட்டாம்பாக்கம் அருகே சாலை சேதம் அடைந்து கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் கெடிலம் நதி புதிய பாலம் வரையிலும், காடாம்புலியூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ஏராளமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும் சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் இறங்கி செல்வதால், எல்.என்.புரம், கும்பகோணம் சாலை, காடாம்புலியூர் ஆகிய பகுதியில் சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
 
                       மேற்கண்ட இவ்விரு சாலைகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளங்களால் இச் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைவது தொடர்கிறது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சிலர் உயிரிழந்தும், பலர் பாதிப்படைந்தும் உள்ளனர். தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தி உயிர்ப்பலி வாங்கும் இத்தகைய பள்ளங்களை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்வராதது ஏன் எனத் தெரியவில்லை. இச் சாலை வழியாக கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பயணித்த போதும் சாலையின் நிலையை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior