கடலூர்:
மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறவிருக்கும், பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு, மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள், முன் வைப்புத் தொகை ஏதுமின்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்களில் பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்வோருக்கு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்க ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இக்கல்வி உதவிóத் தொகை பெறும் மாணவர்கள், முன்வைப்புத் தொகை ஏதுமின்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வங்கிக் குழுவால் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வி உதவித் தொகை பெறத் தகுதி வாய்ந்த மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பயிலும் கல்வி நிலையங்களை அணுகி, வங்கிக் கணக்கு தொடங்கி பயன் அடையலாம்.
கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கல்வி உதவித் தொகை பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்காக, வங்கிக் கணக்கு தொடங்கவும், வங்கிக் கணக்கு விவரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கிக் கணக்கு தொடங்க மாணவர்களுக்கு அடையாள அட்டைகளையும் அவர்கள் வழங்க வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக