காட்டுமன்னார்கோவில் :
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிட உப்பனாற்று வடிகாலை கடந்து சென்றவர், முதலை கடித்து இறந்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (48). சிதம்பரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்த்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, ஊருக்குச் செல்லும் பஸ்சை தவற விட்டதால் காட்டுமன்னார்கோவில் பஸ்சில் சென்று புதுப்பூலாமேடு வந்தார்.
பின்னர் இரவு 10.30 மணிக்கு நந்திமங்கலத்திற்கு பழைய கொள்ளிடம் உப்பனாறு வடிகால் வாய்க்கால் வழியாக வீட்டிற்குச் சென்றார். அப்போது ஆற்றில் இருந்த முதலை, இளங்கோவின் தலையை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.
முதலையின் பிடியில் சிக்கிய இளங்கோவன் அலறல் சத்தம் கேட்டு கரையோர கிராமத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால், முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த குமராட்சி சப் - இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இளங்கோவனை தேடினர். உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று காலை நந்திமங்கலம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கரையோரம் இளங்கோவன் உடல் கிடந்தது. இளங்கோவன், முதலை கடித்து இறந்ததை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அத்திப்பட்டு கிராமத்திற்கு வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக