உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 04, 2010

வெளிநாடுகளுக்குப் பறக்கும் வண்டிப்பாளையம் பொம்மைகள்


கடலூர் வண்​டிப்​பாளையத்​தில் பொம்மை தயா​ரிக்​கும் தொழி​லாளி.
 
கடலூர்:
 
              கடலூரை அடுத்த பண்டிதர்பாளையம் என்பதுதான் பின்னாளில் வண்டிப்பாளையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே சிறந்த நகரமாக விளங்கியது வண்டிப்பாளையம். தற்போது கடலூர் நகரத்தின் ஒரு பகுதியாக, சற்று பின்தங்கிய பகுதியாகவும், பழமையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்கி வருகிறது.  
 
                 வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிக்கும் தொழில் பாரம்பரியம் மிக்கதாக பல தலைமுறைகளைத் தாண்டி நிலைத்து நிற்கும் தொழிலாக இருந்து வருகிறது. வண்டிப்பாளையத்தை அடுத்த மணவெளி கிராமத்திலும் அண்மைக்காலமாக பொம்மைத் தொழில் வளரத் தொடங்கி இருக்கிறது. வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. அவர்களில் பல குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பொம்மை தயாரித்து வருகிறார்கள். பொதுவான கலைத்திறன் கொண்ட பொம்மைகள் மற்றும் கடவுள்களின் உருவங்களில் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. 
 
              கிறிஸ்தவ மதத்தினருக்கான பொம்மைகள் மற்றும் இந்து மதத்தினருக்கான பொம்மைகள் எனத் தனித்தனிக் குடும்பங்கள் இவற்றைத் தயாரிக்கின்றன. ஆண்டு முழுவதும் வீடுகளில் நடைபெறும் இத்தொழில், நவராத்திரி மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் விற்பனையின் உச்சக் கட்டத்தை அடைவதும், மற்ற காலங்களில் சாதாரணமான விற்பனையும், உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் காலமாகவும் அமைந்து உள்ளது. தற்போதைய விற்பனையில் கிருஷ்ணர், ராதை, லட்சுமி, முருகன் பொம்மைகள் சிறப்பான இடத்தைப் பிடித்து உள்ளன.
 
பொம்மைத் தொழில் குறித்து வண்டிப்பாளையம் துரைராஜ் கூறியது
 
                 எங்கள் குடும்பத்தினர் 3 தலைமுறையாக பொம்மை செய்து வருகிறோம். வண்டிப்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மைத் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. பலர் பாரம்பரியமாகச் செய்து வருகிறார்கள். வண்டிப்பாளையத்தில் பெரும்பாலும் களிமண் மற்றும் காகிதக் கூழால் தயாரிக்கும் பொம்மைகள்தான் அதிகம். களிமண்ணால் செய்து அதைச்சுட்டு பின்னர் வர்ணம் தீட்டுகிறோம். காகிதக் கூழை அரைத்து வாங்கி அதில் சுக்கான் மாவு, மரவள்ளிக் கிழங்குமாவு ஆகியவற்றைச் சேர்த்து பொம்மை தயாரிக்கிறோம். 
 
                          அச்சுகளில் வார்த்து எடுத்து காய வைத்து வர்ணம் தீட்டுகிறோம். பொம்மைத் தொழிலில் மனைவி பிள்ளைகள் என்று குடும்பமாக உழைக்கிறோம். காலை 7 மணிக்கு தொழில் செய்யத் தொடங்குவோம். பல நேரங்களில் இரவு 10 மணி வரைகூட தொழில் செய்வோம்.  இந்தத் தொழிலில் உழைப்புதான் முக்கியம். உழைப்புக்கு ஏற்பதான் ஊதியம் கிடைக்கும். வண்டிப்பாளையத்தில் 10க்கு கிடைக்கும் சிறிய விநாயகர் சிலை முதல், 5 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள கலையம்சம் பொருந்திய சிலைகளும் தயாரிக்கிறோம். 
 
                   கடலூரில் இருந்து மும்பை, தில்லி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் வண்டிப்பாளையம் பொம்மைகளை வாங்கி, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ மதம் சார்ந்து பொம்மைகள் கேரளம், கோவா போன்ற மாநிலங்களுக்கு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றார் துரைராஜ்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior