உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 04, 2010

தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை

சிதம்பரம்:

              தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய சட்ட வரைவை முதல்வர் கொண்டுவர வேண்டும் என்று தமிழகத் தமிழாசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழகத் தமிழாசிரியர் கழக மாநில சிறப்புத் தலைவர் சு.நஞ்சப்பனார் சிதம்பரத்தில் கூறியது:

                 தமிழகத் தமிழாசிரியர் கழகம் ஆண்டுக்கு 4 செயற்குழுக் கூட்டங்களை நடத்துகிறது. சிதம்பரத்தில் நடைபெற்ற 4-வது செயற்குழுக் கூட்டத்தில் மேலவைத் தேர்தலில் தமிழாசிரியர் கழகம் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 15 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இக்கழகம், திரு.வி.க.வால் தோற்றுவிக்கப்பட்டது. பல்வேறு தமிழ்ச் சான்றோர்கள் நிர்வாகிகளாக இருந்துள்ளனர்.

                 தமிழாசிரியர் கழகத்தின் நீண்ட நாளைய கோரிக்கையான, தமிழ்வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் இந்த விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழ்வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தால் தமிழகத்தில் நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேர்ச்சி விகிதமும் உயர்ந்துள்ளது.

                        தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கட்டணச் சலுகை அளித்ததாலும் இந்த ஆண்டு சுமார் 75 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அம்மாணவர்கள் உயர் படிப்பு பயில உதவித்தொகை வழங்க வேண்டும். ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி அரசு கல்வித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

                   இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற அக்.9-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்று சு.நஞ்சப்பனார் தெரிவித்தார். மாநிலத் தலைவர் ஆ.ஆறுமுகம், பொதுச்செயலாளர் இரா.வெங்கடேசன், பொருளாளர் க.வஞ்சிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior