உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

வெள்ளம்- வறட்சியில் பாதுகாக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வது மிக அவசியம்: வேளாண் இயக்குனர் அறிக்கை

கடலூர்:
  
கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

                             கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி துரிதகதியில் நடைபெற்று, இதுவரை சுமார் 30 ஆயிரம் எக்டரில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் சுமார் 97 ஆயிரம் எக்டரில் சம்பா சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                      ஆண்டுதோறும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை பெய்யும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள், மகசூல் இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பயிர் காப்பீடு செய்வது மிக அவசியம். இதற்கென தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தினை தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்து தேவையான காப்பீடு பிரிமியத்தினை உரிய படிவத்துடன் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளிலேயே பிரிமியத் தொகை வசூல் செய்யப்படும்.

                   கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டுத் தொகையில் 2 சதவீத தொகையினை பிரிமியமாக செலுத்த வேண்டும். இதில் தமிழ்நாடு அரசால் 50 சதவீதம் இதர விவசாயிகளுக்கும் 55 சதவீதம் சிறு,குறு விவசாயிகளுக்குமான பிரிமியத் தொகை மானியமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.
அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.13024 காப்பீடு செய்யவிரும்பும் கடன் பெறாத சிறு,குறு விவசாயிகள் 117 ரூபாயும் இதர விவசாயிகள் 130 ரூபாயும் பிரிமியமாக செலுத்த வேண்டும். கடன் பெறம் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பிரிமியத் தொகை ஏக்கருக்கு 130 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                       இந்த தொகையினை 15.12.2010-க்குள் உரிய படிவத்துடன் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ விவசாயிகள் செலுத்தி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான படிவம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும். இது குறித்து மேலும் விவரங்கள் பெற விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior