சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படும் 6640 கனஅடி உபரிநீர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்கக் கூடாது என்ற முடிவால் கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது என பொதுப்பணித்துறை கொள்ளிட வடநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.
தற்போது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 அடி நீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். மழைக்காலம் என்பதால் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேல் அதிகளவு நீர் தேக்கி வைக்கக் கூடாத நிலையில் கீழணையிலிருந்து தற்போது வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரிப் பாசனத்துக்கு 50 கனஅடியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு அரியகோஷ்டி வாய்க்கால், மானம்பார்த்த வாய்க்கால், பழையமுரட்டு வாய்க்கால், உடையூர், மிராளூர் வாய்க்கால் ஆகியவற்றில் 449 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் மதகுகள் முழுவதுமாக அடைக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார். வெள்ளாற்றில் 6640 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் கோமுகி மணிமுத்தாறிலிருந்து பிரிந்து வெள்ளாறு உருவாகி சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வந்து கடலில் கலக்கிறது. தற்போது விருத்தாசலம், விளாந்துறை, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளாற்றில் அதிகளவு நீர் வருகிறது.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் முழுக்கொள்ளளவு 7.5 அடி கொள்ளளவு நீர் உள்ளதால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் 6640 கனஅடிநீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக