கடலூர்:
வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின.
கடந்த 2 நாளாக மாவட்டத்தில் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.வெள்ளாற்றில் நீர்வரத்து இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்த ஆண்டு வெள்ளாற்றில் சுமாராக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வெலிங்டன் ஏரி நிரம்பி வருகிறது.
ஏரியின் கரை அண்மையில் |29 கோடியில் பலப்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த ஆண்டு 23 அடி உயரத்துக்கு மட்டுமே (மொத்த உயரம் 29.7 அடி) நீர் பிடிக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை அறிவுறுத்தி உள்ளது.ஞாயிற்றுக்கிழமை ஏரியின் நீர் மட்டம் 19.4 அடியாக இருந்தது. ஏரிக்கு 460 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் அதன் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் வாய்க்கால்களைத் தூர் வாரவேண்டும் என்று, நாம் விவசாய அமைப்பின் கடலூர் மாவட்டச் செயலாளர் வேணுகோபால் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்ற ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நீர் மட்டம் (மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்) வருமாறு:
வீராணம் 45.5 அடி (47.5 அடி). ஏரிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
வாலாஜா 6.5 அடி (5.5 அடி). ஏரிக்கு விநாடிக்கு 3,605 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. வரத்து நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
பெருமாள் ஏரி 5.5 அடி (6.5 அடி) ஏரியில் இருந்து விநாடிக்கு 1504 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்துள்ள மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
மே.மாத்தூர் 87,
கொத்தவாச்சேரி 64,
கடலூர் 60,
குப்பநத்தம் 50,
விருத்தாசலம் 44,
பண்ருட்டி 40,
பரங்கிப்பேட்டை 29,
வானமாதேவி 29,
அண்ணாமலை நகர் 24,
லக்கூர் 24,
சிதம்பரம் 23,
காட்டுமயிலூர் 22,
ஸ்ரீமுஷ்ணம் 20,
சேத்தியாத்தோப்பு 18,
வேப்பூர் 13,
கீழ்ச்செறுவாய் 12,
பெலாந்துரை 11,
லால்பேட்டை 10.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக