தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ் முதல் தாளுடன் தொடங்கும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 25-ம் தேதி முடிவடைகின்றன. அதன்பிறகு, மார்ச் 28-ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 11-ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி முடிவடைகின்றன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28-ம் தேதி தொடங்குகின்றன.வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷம்:கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தேர்வுக்கு முன்னதாக கேள்வித் தாளைப் படிப்பதற்கு 10 நிமிஷம் ஒதுக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிஷமும் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் என அனைத்து மாணவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 தேர்வுகள் காலை 10.15 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வுகள் காலை 10.15 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை நடைபெறும்.
தேர்வுகளுக்கு இடையே சீரான இடைவெளி:
பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கும், ஆங்கிலத்துக்கும் இடையே 3 நாள்கள் விடுமுறையும், ஆங்கிலத்துக்கும், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் இடையே 2 நாள்களும் விடுமுறை உள்ளன. இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் பாடத் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை உள்ளது. இதனால், மாணவர்கள் தங்களை முழுமையாகத் தேர்வுக்கு தயார் செய்துகொள்ளலாம்.
தேர்தலால் மாற்றம் இல்லை:
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு தேதிகளில் முன்கூட்டியே நடத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வும், மார்ச் கடைசி வாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக