உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 04, 2010

கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் காற்று மாசு தொடர் கதைதானா?


கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ப.சண்முகம் (வலமிருந்து 3-வது) வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
 
கடலூர்:

               கடலூர், சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு, எத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும், இன்றும் தொடர் கதைதானா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

                  இது மீண்டும் ஒரு போபால் சோகத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை அண்மைக்கால ஆய்வு அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் கூட்டடைப்பு மற்றும் அதன் துணை அமைப்பான, கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் சார்பில் போபால் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கடலூரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுக்களை ஆய்வு செய்து, ஏற்கனவே 13 அறிக்கைகளை வெளியிட்ட சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், தனது 3 புதிய அறிக்கைகளை வெளியிட்டது.

                  கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிப்காட் தொழிற்பேட்டையில் சேகரிக்கப்பட்ட காற்றுமாசு, பாதுகாப்பான பைகளில் அடைக்கப்பட்டு, அமெரிக்க நாட்டின் தரம் வாய்ந்த 6 ரசாயனக் கூடங்களில் ஒன்றான கொலம்பியா ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவுகளை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இந்த நிகழ்ச்சியில் விவரித்தார்.

               முந்தைய 13 அறிக்கைகளின் வாயிலாக சிப்காட் தொழிற்சாலைகளால், கடலூர் பகுதியில் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மடங்கு அதிகம் உள்ளதாகத் தெரிவித்தன. 

அதைத் தொடர்ந்து, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்  2008-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 

                   கடலூர் காற்று மண்டலத்தில் புற்று நோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக அறிவித்தது. எனினும் இந்த நிலைய முழுமையாக மாற்றி அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாது என்பது பொதுநல அமைப்புகளின் கருத்து.÷இந்த நிலையில் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் இந்த 3 அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. இப்போதும் சிப்காட் தொழிற்சாலைகள் பகுதி காற்று மண்டலத்தில் 6 வேதிப் பொருள்கள் உள்ளிட்ட 19 நச்சு வேதிப் பொருள்கள் இருப்பதை அந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன. 

                இந்தச் சோதனை முடிவுகள் மற்றொரு போபாலாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மாறிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. எனவே சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடைக்கால தடைவிதித்து சுற்றுச்சூழல், வனத்துறை எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது. எனினும் தடை விதிக்கப்பட்ட கடந்த 11 மாதங்களில், 150 அத்துமீறல்கள் நிகழ்ந்து உள்ளன. 

               என்றாலும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நல்நோக்கத்தை நிறைவேற்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிறைவேற்றவில்லை. மாசுக் கட்டுப்பாடு வாரியமோ, சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகமோ மாசுகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் தொடர் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

                   இதற்கிடையே சிப்காட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 6 புதிய தொழிற்சாலைகளின் கட்டுமானங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. 6 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும்தளம், ஜவுளிப்பூங்கா, 13,320 மெகா வாடா திறன்கொண்ட 3 அனல் மின் நிலையங்கள் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இப்புதிய திட்டங்கள் சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்கும் என்றார் நிஜாமுதீன்.

                    புதிய ஆய்வு அறிக்கைகளை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சண்முகம் வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்டத் துணைச் செயலர் ஜெகரட்சகன், தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலர் ஏழுமலை, நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி ஆகியோரும் பேசினர். சமூக சுற்றுச் சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior