உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 14, 2010

தமிழகத்தில் 42 லட்சம் சர்க்கரை நோயாளிகள்

             தமிழகத்தில் 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது என சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

                 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோபாலபுரம் டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையின் சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம், தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளை ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். 

ராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறியது:

                    தமிழகம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சண்டீகர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் தலா 4,000 பேரிடம் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 42 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 13.5 சதவீதம். கிராமப்புறங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் விகிதம் 6.9 சதவீதம். ஆக, தமிழக மக்கள்தொகையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் விகிதம் 9.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் பேருக்கு...: 

                       இந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 8 சதவீதம் பேருக்கும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 6.4 சதவீதம் பேருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு: 

                   தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை சராசரியாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கினர் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய்: 

                   உயர் ரத்த அழுத்த நோய், ரத்த கொழுப்புச் சத்து அளவுகள், உடல் பருமன் ஆகியவை குறித்தும் இந்த ஆய்வின்போது பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

                தமிழகத்தில் 1.2 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 32.6 சதவீதம் பேருக்கும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 23.8 சதவீதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை உள்ளது. 

உடல் பருமனும், பெண்களும்...: 

                  இந்த ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் 76 லட்சம் பெண்களுக்கும் 50 லட்சம் ஆண்களுக்கும் உடல் பருமன் பிரச்னை உள்ளது. 86 லட்சம் பேருக்கு ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து பிரச்னை உள்ளது.

கிராமப்புறங்களுக்கும்... 

                 முன்பெல்லாம் தமிழக நகர்ப்புறங்களில் வசிப்போரிடையே மட்டும் அதிக அளவில் காணப்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு, இப்போது கிராமப்புற மக்களிடமும் அதிகரித்து வருவதை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன'' என்றார் டாக்டர் அஞ்சனா. 

                    இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் தலைமை வகித்தார். வடகிழக்கு மாநிலங்களில் செய்யப்பட உள்ள இரண்டாவது கட்ட சர்க்கரை நோய் குறித்த ஆய்வுத் திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வடகிழக்குப் பிராந்திய உதவி இயக்குநர் டாக்டர் தன்வீர் கௌர் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் ஜெ.மகந்தா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior