பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் பருவ மழை அதிகரிப்பு, மலட்டாறில் தூர் வாரப்பட்டதன் விளைவாகவும் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள் ளது. எஞ்சியுள்ள 12 கி.மீ., தூரத்தையும் முழுமையாக தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பண்ருட்டி தாலுகாவில் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறு உள்ளன. திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றின் அணைக்கட்டில் இருந்து பிரியும் மலட்டாறு திருவெண்ணைநல்லூர் அரசூர் வழியாக பண்ருட்டி அடுத்த கரும்பூர், ரெட்டிக்குப்பம், திருத்துறையூர், வரிஞ்சிப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம், திருவதிகை ஏரி வழியாக திருவதிகை கெடிலம் ஆறு அணைக்கட்டு சென்று கலந்தது. கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மலட்டாறு இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் மணல்மேடானது. இதனையடுத்து அந்த ஆண்டு இறுதியில் மலட்டாறு பகுதி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின் மலட்டாறில் தண்ணீர்வரத்தின்றி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் தோட்டப் பயிர் செய்து வந்த திருத்துறையூர், கரும்பூர், ஒறையூர், கொரத்தி, கட்டமுத்துப்பாளையம், வரிஞ்சிப்பாக்கம், பூண்டி, குச்சிப்பாளையம் உள்ளிட்ட 60 கிராம விவசாயிகள் 250 அடி வரை ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்தனர். தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதைத் தடுக்க கடந்த 1993ல் "ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாடு எழுச்சிகூடல்' என்ற அமைப்பு தாஜிதீன் தலைமையில் உருவாக்கப்பட்டு வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அனுமதியுடன் முதல் கட்டமாக தூர் வாரினர். இதன் பிரதிபலனாக 1996ம் ஆண்டு முதல் மலட்டாறில் தண்ணீர் வரத்துவங்கியது. அப்போதைய மறைந்த எம்.எல்.ஏ., மணி முயற்சியின் பேரில் கலெக்டர் இறையன்பு 1998ல் "நமக்குநாமே திட்டம்' மூலம் மணல்மேடுகள் கரைகள் அமைக்கும் பணி துவங்கியது.
பின் 2005ல் ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாடு எழுச்சிக் கூடல் தலைவர் தட்சணாமூர்த்தி தனது சொந்த செலவில் திருக்கோவிலூர் சுந்தரேசபுரம் முதல் திருவெண்ணைநல்லூர் வரை இரு கரைகளையும் தூர் வாரினார். 2006ல் கலெக்டர் நிதி மூலம் விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு, தனியாலம்பட்டு, ஆனத்தூர் ஆகிய 3 இடங்களில் மலட்டாறு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முயற்சியால் வரிஞ்சிப்பாக்கம் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ரெட்டிக்குப்பம், கரும்பூர், திருத்துறையூர் பாலங்கள் கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன.
தற்போது மலட்டாறு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 15, கடலூர் மாவட்டத்தில் 55 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கன மழையாலும், சாத்தனூர் அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலட்டாறு ஓடும் கிராமங்களான சேமங்கலத்தில் 10 அடியிலும், ஒறையூரில் 20 அடியிலும், காரப்பட்டில் 5 அடியிலும் திருத்துறையூரில் 30 அடியிலும், கட்டமுத்துப்பாளையத்தில் 40 அடியிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழைக்கு முன்பு 180 அடி ஆழம் வரை இருந்தது இப்படி வெகுவாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்க உள்ளதால் ராசாப்பாளையம், திராசுகுட்டை மலட்டாற்றுற்காக பெரிய பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூர் முதல் கட்டமுத்துப்பாளையம் வரை 45 கி.மீ., வரை தூர்வாரப்பட்டிருந்தாலும் எஞ்சியுள்ள கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம், திருவதிகை வரை 12 கி.மீ., தூர் வாரினால் மட்டுமே வரும் காலத்தில் மலட்டாறில் வரும் தண்ணீர் திருவதிகை ஏரி, அணைக்கட்டு வரை சென்று அப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக