கடலூர் :
கடலோரப் பகுதி கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது குறித்து, புவியியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம், சுரங்கம் அமைத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து வருகிறது. சுரங்கத்தில் ஊறும் தண்ணீர், ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீரின் ஊற்று அழுத்தம் குறைப்பதற்காக சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ராட்சத மோட்டார்களைக் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடியில் உள்ள நன்னீர் மட்டம் குறைவதோடு, அருகில் உள்ள கடல் நீர் உட்புகுவதாகவும், கோடையின் போது அதிக வறட்சியும், மழைக் காலத்தில் வெளியேற்றப்படும் தண்ணீரால் கூடுதல் வெள்ளமும் ஏற்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
அதையொட்டி, உண்மை நிலையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க மத்திய அரசு, ஐதராபாத்தில் உள்ள புவியியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ஐதராபாத் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியில் கடல் நீர் எந்த அளவிற்கு உட்புகுந்துள்ளது என்பது குறித்து நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆராய்ச்சியை கடலோர கிராமங்கள் முழுவதும் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக