கடலூர்:
தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்து இருப்பதால், தமிழ் நாள்காட்டியை வெளியிட வேண்டும் என்று உலகத் தமிழ்க் கழகம் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளது. உலகத் தமிழ்க் கழக கடலூர் கிளை செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தைத் திங்கள் முதல் நாளில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. போகி திருநாளன்று, கடலூர் நகரம் முழுவதும் ஊர்திகளில் சுற்றி வந்து, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மக்களுக்குத் தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டை பின்பற்றும் வகையில், தமிழ் நாள்காட்டி, நாள் குறிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திருவள்ளுவர் அரங்கங்களை அமைக்கவேண்டும். தமிழ் இணைய ஒருங்கு குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு கிளைத் தலைவர் காத்தப்பன் தலைமை தாங்கினார்.
உலகத் தமிழ்க் கழக தலைமையகத் துணைத் தலைவர் கதிர் முத்தையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். செயலாளர் பழநிவேல் வரவேற்றார். அ.தென்னவன், குமரப்பன், சீனுவாசன், தமிழன்பன், த.பாலு, இளஞ்செழியன் முத்திரை முத்துக்குமரன், கவிஞர் வெ.கி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குமரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக