உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 08, 2011

விருத்தாசலத்தில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது


விருத்தாசலத்தில் பொங்கலை வரவேற்று கும்மிக் கொட்டி நடனமாடும் மாணவிகள். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.
 
விருத்தாசலம்:

               விருத்தாசலத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் வெள்ளிக்கிழமை முதல் ஒருசில பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழாவும் நடைபெற்றது. 

               விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தோரணங்கள், கரும்புகள் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பழம்பெரும் பண்பாட்டை விளக்கும் வகையில் மாணவர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் தாவணி அணிந்தும் வந்திருந்தனர். விழாவில் மாணவிகளின் கும்மி நடனம் நடைபெற்றது. பின்னர் மண் பானையில் சமத்துவப் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவப் பொங்கல் வழங்கப்பட்டது.  

சமத்துவப் பொங்கல் குறித்து பள்ளி முதல்வர் சந்தானம் தெரிவித்தது: 

                   பள்ளி மாணவர்களிடத்தில் பொங்கல் விழாவான சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் குறித்தும், இவ்விழாவின் சிறப்புகள் குறித்து தெரியபடுத்தவும், மாணவ-மாணவிகள் சமய பேதங்களை மறந்து அனைவரையும் சமமாக மதித்து நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவும் இவ்விழாவை நடத்தினோம் என தெரிவித்தார்.  

இதுகுறித்து பள்ளி மாணவர்கள் கூறியது:  

              சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடியது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கும்மி போன்ற விளையாட்டுகள் இதுவரை எங்களுக்கு தெரியாது. ஆனால் சமத்துவப் பொங்கலை முன்னிட்டு எங்கள் ஆசிரியர்கள் கும்மி விளையாட்டு எப்படி விளையாடுவது என சொல்லி தந்தனர். கும்மிக் கொட்டி விளையாட இன்னும் ஆர்வமாக இருக்கிறது என தெரிவித்தனர். 

                நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சந்தானம், ஆசிரியர்கள் பெர்னத்மேரி, சுகுமார், செந்தில்குமார், ரமேஷ், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  மண்பானைகள்: பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண் பானைகள், மண் சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

பொங்கல் விழா குறித்து சமூக ஆர்வலரான சி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தது:  

                பொங்கல் திருவிழா என்பது ஜாதி, மதம் இவைகளை கடந்து அனைவரும் கொண்டாடும் சிறப்பான திருவிழாவாகும். சூரியப் பொங்கல் அன்று வீட்டின் வாசல்களில் மாக்கோலமிட்டு, பொங்கல் வைத்து சூரியனை வணங்கி வழிபடுவார்கள். அதேபோல் மாட்டுப் பொங்கல் அன்று தனக்காக உழைக்கும் மாட்டுக்கு பொங்கலிட்டு நன்றி செலுத்துவர்.  மேலும் காணும் பொங்கல் விழாவில் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். 

             ஆனால் தற்போது பொங்கல் விழாவில் இதுபோன்ற நிகழ்வுகள் மெல்ல குறைந்து வருகின்றன. இதுபோன்ற நிலை இல்லாமல் அனைவரும் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் சமத்துவப் பொங்கல் விழாவை அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என கூறினார். 
 
             பொங்கல் விழாவை அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சிறப்பாக கொண்டாடி தைத் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior