உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு

விருத்தாசலம் : 

             புண்ணிய நதி என அழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் "மினி கூவமாக' மாறி வருவதால் நதியின் பெருமையை குலைப்பதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதான நகரமாக விருத்தாசலம் விளங்கி வருகிறது. 

             இந்நகரில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்டவைகளும், புண்ணிய நதியான மணிமுக்தா ஆறு ஓடுவதும் இந்நகரின் முக்கிய சிறப்பாகும். மணிமுக்தா ஆற்றின் கரையோரம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இருப்பதால் கோவில் விழா நாட்களிலும், காணும் பொங்கல் அன்றும் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் ஒன்று கூடி விளையாடி மகிழ்வர். 

           அதுபோல் மாசி மக திருவிழாவில் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் கூடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடும் பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் குளித்துவிட்டு மாலை அணிவதும் வழக்கம்.இவ்வளவு சிறப்பு மிக்க மணிமுக்தா ஆற்றில் இருந்துதான் விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் கோவில்களுக்கு பங்குனி மாதங்களில் அலகு மற்றும் காவடிகளை எடுத்துச் செல்வர்.

              மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த மணிமுக்தா ஆறு உரிய பராமரிப்பில்லாததால் "மினி கூவமாக' மாறி வருகிறது. நகரின் முக்கிய வடிகாலான ஊத்தோடை வழியாக பெரும்பாலான பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இக்கழிவுநீர் மணிமுக்தா ஆற்றின் பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாலத்தை கடந்து செல்பவர்கள் மூக்கை மூடிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது

              .பிரசித்தி பெற்ற இந்த ஆறு சுகாதார சீர்கேடு அடைந்து வருவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் நகரப் பகுதியில் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி வருகிறது. நல்ல சுவையாக இருந்த குடிநீர் தற்போது குடிப்பதற்கு லாயக்கற்ற நீராக மாறி வருவதால் நகர மக்கள் "மினரல் வாட்டரை'யே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு ஆற்றை ஒட்டியுள்ள வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட மண் வளத்தை பாதிக்கும் மக்காத கழிவுகளை கொட்டி புண்ணிய நதியான மணிமுக்தாவை பாழ்படுத்தி வருகின்றனர். 

             விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏட்டளவில் மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.அதோடு ஆற்றின் ஓரமாக கால்வாய் வெட்டி ஊத்தோடை வழியாக விடப்படும் கழிவுநீரை நகர எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விடும்படியும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் கழிவுகள் கொட்டாத வகையிலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior