உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 16, 2011

பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு கிராமத்தில் பால் குளிரூட்டும் மையம் மீண்டும் திறக்கப்படுமா? : 30 கிராம விவசாயிகள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : 

            அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு பால் குளிரூட்டு மையம் மூடப்பட்டு ஒரு ஆண்டாக செயல்படாமல் உள்ளதால் 30 கிராமங்களில் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரியப்பட்டு கிராமத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வசதியுடன் பால் குளிரூட்டு மையம் துவங்கப்பட்டது.

             ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுனாமி அவசரகால உதவித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த மையத்தை அய்யனார் சுய உதவிக்குழு பராமரித்தது. பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த கொத்தட்டை, அரியகோஷ்டி, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, கருவேப்பம்பாடி, பூண்டியாங்குப்பம், பு.முட்லூர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் தினமும் சுமார் 3,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பால் இந்த குளிரூட்டு மையம் மூலம் குளிரூட்டப்பட்டு விழுப்புரம் ஆவின் மையத்திற்கு அனுப்பட்டு வந்தது. இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் கால்நடை வைத்திருந்த விவசாயிகள் அதிகளவில் பயனடைந்தனர்.

               காலப்போக்கில் அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களிடம் பால் தரமில்லை என திருப்பி அனுப்புவது, அரசு நிர்ணயித்த விலையை விட பாதியாக குறைத்தது என பல்வேறு கெடுபிடி மற்றும் ஊழல் காரணமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வரத்து குறையத் தொடங்கியது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் உற்பத்தி சங்கங்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய கால்நடைகள் மற்றும் பீரோ, டேபிள், சேர், பால் சோதனை கருவி உள்ளிட்டவைகள் எதையும் பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கவில்லை.

              இதுபற்றி விழுப்புரம் ஆவின் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பால் வரத்து முற்றிலும் தடைபட்டது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பால் குளிரூட்டு மையம் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனடியாக பால் குளிரூட்டு மையத்தை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior