கடலூர்:
300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் அருகே வெள்ளக்கரை, ஆயிபுரம் கிராமங்களில் தலா ரூ. 21.79 லட்சத்தில் கட்டப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் 9 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடலூரில் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்படும். இது 300 மாணவர்கள் படிக்கும் வசதி கொண்டதாக அமையும். எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வரும் முதல்வர் கருணாநிதிக்கு, மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர். கடலூர் அருகே ராமாபுரத்தில் கால்நடை கிளை மருத்துவமனையும், குடிகாடு, ஊராட்சி ஈச்சங்காடு, சேடப்பாளையம் கிராமங்களில் அங்கன்வாடி மையங்களையும், பிள்ளையார்மேடு கிராமத்தில் ரேஷன் கடையையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சின்னகாரைக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.03 கோடியில் கட்டப்பட இருக்கும் 15 வகுப்பறைக் கட்டடங்களுக்கு, அடிக்கல் நாட்டி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 29 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 25 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 81 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டு உள்ளன. முதல்வர் ஆண்டுதோறும் 100 பள்ளிகளைத் தரம் உயர்த்த உத்தரவு பிறப்பித்து வருகிறார் என்றார் அமைச்சர். நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, மருத்துவத் துறை இணை இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக