உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

கடலூரில் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்கள்

கடலூர்:

            கடலூரில் சாலையோர உணவகங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட்டு, உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது.

                விலைவாசி ஏற்றம் காரணமாக கடலூர் மாவட்ட ஹோட்டல்களில், உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 1.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரமான கடலூரில், ஹோட்டல் பண்டங்களின் விலை அதிகமாக உள்ளது. கடலூரில் தரமான சைவ ஹோட்டல்களில் சாப்பாடு விலை ரூ.45 முதல் ரூ.100 வரை உள்ளது. மெஸ்களில் சாப்பாடு விலை ரூ.35. ஹோட்டல்களில் 2 இட்லி விலை ரூ.12 முதல் ரூ.20 வரை. தோசை விலை ரூ.30.சாலையோரக் கடைகளில் ரேஷன் அரிசி இட்லி ஒன்றின் விலை ரூ.4. அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூடைகளில் சுமந்து விற்கும் இட்லி விலை ரூ.2. அசைவ உணவுகளைப் பொருத்தவரை, சாலையோரங்களில் கோழி பிரியாணி, குறைந்தபட்ச விலை ரூ.50. தரமான ஹோட்டல்களில் விலை ரூ.100-க்கு மேல்.2 மாதங்களுக்கு முன் காய்கறிகள், பருப்பு, எண்ணெய் விலைகள் பெருமளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, கடலூரில் உணவுப் பண்டங்களின் விலைகள் சென்னை ஹோட்டல்களுக்கு நிகராக உயர்த்துவிட்டன.

              இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் ஹோட்டல்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அவர்கள் கையேந்தி பவன்களையும், சாலையோர உணவகங்களையும், கூடைகளில் சுமந்து சாப்பாடு, இட்லி விற்போரையும் நாட வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.இதனால் இத்தகைய கடைகளின் எண்ணிக்கை கடலூரில் அண்மைக்காலமாக பெருமளவு அதிகரித்து இருக்கிறது.ஏழை மக்கள், உடல்நலமின்றி கடலூர் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, கோரிக்கை மனுக்களை அளிக்க வருவோர், அவர்களின் உறவினர் உள்ளிட்டோர், உணவுக்காக, கையேந்தி பவன்களையும், கூடையில் சுமந்து வந்து விற்போரையுமே நம்பி இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

              கடலூர் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு புறநோயாளிகள் வருகை 4 ஆயிரத்தைத் தொட்டு விட்டது. திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்குக் குறைந்தபட்சம் 1,000 மனுக்கள் வருகின்றன. மனுக்களுடன் வருவோர், சுமார் 5 ஆயிரம் பேர். இவர்களின் பசியைப் போக்குவோர் கையேந்தி பவன்களை நடத்துவோரும், கூடைகளில் சுமந்து வருவோர்தான். ஆனால் இந்த உணவுப் பண்டங்களின் தரம் சொல்லும் தரமன்று. உணவுப் பண்டங்களை எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கிறார்கள் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாக உள்ளது. 

               தள்ளுவண்டிகளில் கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ் என, டம்ளர்களில் விற்கும் உணவுப் பொருள்கள், அவற்றுக்கு வழங்கப்படும் மோர் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றின் சுகாதாரத் தரம் எதற்கும் அளவுகோல் இல்லை.கடலூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதாக மார்த்தட்டிக் கொள்ளும் மருத்துவமனை அதிகாரிகள், நோயாளிகளுடன் வரும் 9 பேர், மருத்துவமனை வாயிலிலேயே சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிட்டு, பல்வேறு நோய்களையும் வாங்கிக் கொண்டு ஊர்திரும்புகிறான் என்பதை, தேசிய தரச்சான்றுக்காகக் காத்து இருக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனதேன்? சுகாதாரத்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இதுபற்றிக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 

             "கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிநீர், சுடுநீர் கூட தனியார் தொண்டு நிறுவனம்தான் வழங்குகிறது.கடலூர் நகரிலேயே மிகவும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் கிடைக்கும் இடம் அரசு மருத்துவமனை வளாகம்தான்.இது குறித்து மருத்துவத் துறை, சுகாதாரத் துறை கவலைப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இவர்கள்தான் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றுப் பெற்றுத்தரப் போகிறார்களாம் பெரும்பாலான தனியார் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில், நிர்வாகம் சார்பில் சுகாதாரமான, நியாயமான விலையில் உணவுப் பண்டங்கள் கிடைக்கும், கேன்டீன்கள் நடத்தப்படுகின்றன.

                  ஆனால் இங்கு அதற்கான எந்த முயற்சியும் அரசு மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில், கேன்டீன்களை சுயஉதவிக் குழுக்கள் மூலம் நடத்தலாம்.காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்தபோது, ஹோட்டல்களில் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் காய்கறி உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந்தும், பண்டங்கள் விலை குறைக்கப் படவில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior