தமிழகத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த குரூப் 2 தேர்வு, ஜூலை 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்பட 900 கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்படுவதால், தேர்வில் பங்கேற்க விரும்புவோர் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர், வணிக வரித் துறை உதவி அலுவலர் உள்பட 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதில், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை உதவி அலுவலர் போன்ற பணியிடங்கள் விடுபட்டு இருந்தன. இந்தப் பணியிடங்கள் குரூப் 2 தேர்வில் சேர்க்கப்படாமல் இருந்தது. தேர்வு ஒத்திவைப்பு: இந்த நிலையில், ஜூலை 3-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிக்கையை சனிக்கிழமை வெளியிடுகிறது. தேர்வை ஜூலை 31-ம் தேதி நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.
கூடுதல் பணியிடங்கள்:
ஏற்கெனவே உள்ள 4 ஆயிரத்துக்கும் கூடுதலான பணியிடங்களுடன் மேலும் 900 பணியிடங்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வை எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க வசதியாக 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தேர்வை எழுத 5 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இப்போது கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்படுவதால் மேலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிப்பார்கள் எனத் தெரிகிறது.
சிறப்பான பதவிகள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப் 2 தேர்வு அறிக்கையில் சில குறிப்பிட்ட பதவிகளைத் தவிர்த்து, சிறந்த துறைகளில் பணியிடங்கள் இல்லை. குறிப்பாக, தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் போன்றவை குரூப் 2-வில் சேர்க்கப்படவில்லை. இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே உள்ளதை விட மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக