கடலூர்:
அரசு ஊழியர் அனுப்பிய கடிதத்தை, உரிய தேதியில் அவரது அலுவலகத்துக்கு பட்டுவாடா செய்யாத கொரியர் நிறுவனம், ரூ. 4 ஆயிரம் நஷ்டஈடு வழங்க, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருத்தாசலம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் ராஜசேகரன். சிதம்பரம் தேசிய யானைக்கால் தடுப்புத் திட்ட அலுவலகத்தில் பணிபுரிறார். ராஜசேகரன் விடுப்பு கோரி தனது அலுவலகத்துக்கு, விருத்தாசலத்தில் இயங்கும் எஸ்.டி. கொரியர் நிறுவனம் மூலம் 16-9-2010ல் கடிதம் அனுப்பினார். ஆனால் அக்கடிதம் சிதம்பரத்திóல உள்ள அவரது அலுவலகத்துக்குப் போய்ச் சேரவில்லை. எனவே ராஜசேகரன் விடுப்பு குறித்து, அவரது அலுவலகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போயிற்று. இதுதொடர்பாக ராஜசேகரன் 27-9-2010 அன்று சிதம்பரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவன அலுவலகத்தை அணுகிக் கேட்டபோது, கடிதங்களை பட்டுவாடா செய்யும் ஊழியர் 27-9-2010 வரை விடுப்பில் உள்ளதால், 16-ம் தேதியக் கடிதம் பட்டுவாடா ஆகாமல் அலுவலகத்திலேயே உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது.
எனவே அக்கடிதத்தை ராஜசேகரன் பெற்று, தனது அலுவலகத்தில் தாமதமாக ஒப்படைக்க நேர்ந்தது. சேவைக் குறைபாடு குறித்து கொரியர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதில் நிறுவனம் சரியான பதில் அளிக்காததால், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் முலமாக, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜெயபாலன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ். பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்புக் கூறினர்.
அதில் "கொரியர் நிறுவனம் தபாலை உரிய நபரிடம் ஒப்படைக்காதது சேவைக் குறைபாடு. எனவே எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகம், விருத்தாசலம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள கொரியர் நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ, ராஜசேகரனுக்கு நஷ்டஈடாக ரூ. 3 ஆயிரத்தை 16-9-2010 முதல் 10 சதம் வட்டியுடனும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 1,000 மும், 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட ராஜசேகரன் சார்பில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நேரில் ஆஜராகி வாதாடினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக