கடலூர்:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிறுவனங்களில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான பதவிக் காலம், அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அக்டோபர் 25ல் புதிய நிர்வாகிகள் பதவியேற்க வேண்டும். கடலூர் நகராட்சிப் பகுதியில் சுனாமிக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போருக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூரில் 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவனாம்பட்டினத்தில் 600 வீடுகளும், ஏணிக்காரன் தோட்டத்தில் 1,300 வீடுகளும் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வசிக்கும் 1,900 குடும்பங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.
இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும், சுனாமிக்கு முன்னர் எந்தெந்த கிராமங்களில் வசித்தார்களோ, அங்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களின் புதிய வசிப்பிடங்கள் சுனாமிக் குடியிருப்பாகவும், வாக்காளர் பட்டியல் முகவரிகள், சுனாமிக்கு முந்தைய கிராம வசிப்பிடங்களாகவும் உள்ளன உள்ளாட்சித் தேர்தலிலும் இதேநிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் என்பது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் நகலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்.
சட்டப் பேரவைத் தேர்தலின் போதே சுனாமிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் பழைய கிராம முகவரி அடிப்படையில் தேடியபோது, அங்கு பலருக்கு வாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுனாமிக் குடியிருப்பில் இருந்து அவர்களின் பழைய இருப்பிடங்கள் வெகு தொலைவில் இருந்ததால், வாக்களிக்க முடியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.
இப்படியொரு இரட்டை நிலை இருப்பதால், பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போகும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு வார்டில் உள்ள கவுன்சிலருக்கு வாக்களித்துவிட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, மற்றொரு வார்டு கவுன்சிலரை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் அந்த மக்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார்.
மேலும் ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பகுதி வீடுகள் மூன்று வார்டுகளிலும், தேவனாம்பட்டினம் சுனாமிக் குடியிருப்புப் பகுதி வீடுகள் இரண்டு வார்டுகளிலும் இடம் பெற்று உள்ளன. ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீர் அகற்று நிலையம் எந்த வார்டிலும் இடம்பெறவில்லை.இதனால் கழிவுநீர் அகற்றுதல், உப்பனாற்றில் பாலம் கட்டாததால் சுடுகாட்டுக்காக, 5 கி.மீ. தூரம் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை, பள்ளிக் குழந்தைகள் 3 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத பொதுப் பிரச்னைகளுக்காக எந்த நகராட்சி உறுப்பினரை நாடுவது எப்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்று தெரியவில்லை என்கிறார், மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன்.
இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில்,
கடலூரில் பல வார்டுகள் முறையாகப் பிரிக்கப்படவில்லை. காலப்போக்கில் பல வார்டுகளின் நிலை பெரிதும் மாறிவிட்டது. நீண்டகாலமாக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். வரஇருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, வார்டுகளை மறு சீரமைப்பு செய்தால், மக்களின் பல்வேறு குறைகள் தீரும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக