கடலூர் :
கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றிருக்கும் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறி பயன் பெறலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மக்களால் நேற்று முகாம் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் "களை' கட்டியது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் ஏற்கனவே கலெக்டராக இருந்த சீத்தாராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட கலெக்டராக அமுதவல்லி பொறுப்பேற்றார். சாதாரண ஏழை மக்கள் கூட கலெக்டரை சந்தித்து தமது மனக்குறையை எடுத்துக்கூற வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து வாரம் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைகேட்பு நாள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரை சந்தித்து கொடுத்து வருகின்றனர்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்றது முதல் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் பங்கேற்க சென்று விட்டதால் அதிகாரிகள் மட்டுமே மனுவை பெற்று அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த பொது மக்கள் மனுக்கள் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. நேற்று கலெக்டர் அமுதவல்லி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்று மனுக்களை பெற உள்ளார் என அறிந்தவுடன் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கூடினர்.
கலெக்டர் இல்லாத நாட்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தவர்கள் கூட திருப்தியடையாமல் புதிய கலெக்டரை சந்தித்து தமது குறைகளை எடுத்துக் கூறினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் நேற்று மீண்டும் ஒரு மனுவோடு வருகை தந்தனர். அதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து முகாம் அலுவலகம் "களை' கட்டியது. நேற்று காலை மட்டும் பொது மக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
பெருமை மிகு கட்டடத்தில் மனுக்கள் பெறப்படுமா:
மாவட்ட கலெக்டர் அலுவலகம் ராபர்ட் கிளைவ் காலத்தில் கட்டப்பட்ட வானுயர்ந்த கட்டடமாகும். இக்கட்டடம் இன்றளவும் உறுதியோடு விளங்கி வருகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த கிளைவ் பணிக்காலத்தின் போது கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் ராபர்ட் கிளைவால் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகியவற்றை பார்த்து வியந்தார். இத்தனை ஆண்டுகளை கடந்தும் இக்கட்டிடம் பழுதில்லாமல் கம்பீரமாக இருக்கிறதே என பெருமைப்பட்டார். வரலாற்று புகழ்வாய்ந்த கட்டடத்தில் பணியாற்றுவதே பல கலெக்டர்கள் பெருமையாக கருதினர்.
ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறுவதை நிறுத்தி விட்டு அதிகாரிகள் கூட்டம், மனுக்கள் பெறுதல், ஃபைல் பார்ப்பது என அனைத்து பணிகளையும் வீட்டிலேயே இருந்து பார்த்து வருகின்றனர். அதற்காகவே வளர்ச்சிமன்ற கூடம் அமைத்துக்கொண்டனர். தேர்தலின்போது வேட்பு மனுக்கள் பெறுவதற்காகவும், தேர்தல் முடிவை அறிந்து கொள்வதற்காகவும் தான் கலெக்டர்கள் அலுவலகத்திற்கு வரும் நிலை இருந்து வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதென்பது அரிதான விஷயமாகி வருகிறது.
புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அமுதவல்லி பொது மக்களின் குறைகேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக