காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, தனியார் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, நேற்று மதியம், காட்டுமன்னார்கோவிலுக்கு, தனியார் பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குமராட்சி அருகே செல்லும்போது, பஸ்சின் முன் சக்கரத்தில் இருந்து, சத்தம் வந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், பேரிங் உடைந்தது தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் வரை சென்று விடலாம் என, டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்கினார்.
லால்பேட்டை நெருங்கிய போது, பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் பஸ் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்தபடி நின்றது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். கழன்ற சக்கரம், 300 மீட்டர் தூரம் ஓடி அருகில் உள்ள வயலில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் பஸ் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் எள்ளேரி, லால்பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக