கடலூர் :
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க, புகைப்படம் பதிவு செய்யும் முகாம் வரும் 27ம் தேதி துவங்குகிறது என கலெக்டர் கூறியுள்ளார்.
இது பற்றி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களில் இருந்து தகவல் சேகரிக்கும் பணி மக்கள் தொகை கணக்கெடுப்பு காலமான கடந்தாண்டு ஜூன்- ஜூலையில் நடந்தது. மக்கள் தொகை பதிவேடு தயாரிக்க கடலூர் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி முதல் பண்ருட்டியில் பூங்குணம், எழுமேடு கிராமத்திலும், குறிஞ்சிப்பாடியில் சிறுபாலையூர் (வடக்கு), பூதம்பாடியிலும், சிதம்பரத்தில் பூந்தோட்டம், தவர்த்தாம்பட்டிலும் ஐந்து வயதும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள், பத்து விரல் கைரேகைப் பதிவு மற்றும் விழித்திரை பதிவு செய்ய முகாம்கள் நடக்கிறது.
இதர கிராமங்கள் மற்றும் நகரப் பகுதியில் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படும். முகாம் நடக்கும் இடம், நேரம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தாசில்தார்களால் தகவல் தெரிவிக்கப்படும். முகாம் நடக்கும் போது 2010-11ம் ஆண்டு ஜூன்-ஜூலையில் கொடுக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டினை கொண்டு வர வேண்டும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை அசலாக கொண்டு வர வேண்டும். கடந்தாண்டு ஜூன்-ஜூலையில் நடந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் பெயர் இடம் பெறாவிட்டால், தற்போது முகாம் நடக்கும் இடத்திற்கு சென்று கணக்கெடுப்பாளரிடம் பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். இவர்களுக்கு பின்னர் புகைப்படம் பதிவு செய்யப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக