கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் விதை நெல் பதப்படுத்தும் "மெகா' நிலையம் அமைக்க வேண்டும் என்று, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.விஜயகுமார், செயலர் கே.சொக்கலிங்கம் ஆகியோர் அண்மையில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
விவசாயிகளின் மொத்த விதைத் தேவையில் 17 சதவீதம், அரசு வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை.ஆனால் கடலூர் மாவட்டத்தில் சிறிய அளவில் உள்ள வண்டுராயன் பட்டு, மிராளூர் அரசு விதைப் பண்ணை மற்றும் பதப்படுத்தும் நிலையங்களால், கடலூர் மாவட்ட விவசாயிகளின் விதை நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.தேசிய விதைக் கழகம் மூலமாகவும், துடியலூர் தனியார் விதைப் பண்ணையில் இருந்தும், கடலூர் மாவட்ட வேளாண்துறை வாங்கி விநியோகிக்கும் விதைகள், தரமாக இல்லை.
தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தபோது கள்ளக்குறிச்சி, இருவேல்பட்டு ஆகிய ஊர்களில் இருந்த மிகப்பெரிய விதைநெல் பதப்படுத்தும் நிலையங்கள், மாவட்டப் பிரிவினையின்போது, விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்ந்துவிட்டன.எனவே கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் விதைப் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். விதைப் பதப்படுத்தும் நிலையங்களுக்கு விதை நெல் வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்துச் செலவு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்குóக கட்டுபடியாகும் வகையில், விலையை உயர்த்தி வழங்க வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1,200 மானியம் மற்றும் இடுபொருள்கள் வழங்க வேண்டும்.எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு தனியாக இயக்குநரகம் அமைத்து, உற்பத்தியைப் பெருக்கவும், மத்திய அரசின் மானியங்களைப் பெறவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயறு வகைகள உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தரமான விதைகள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். பொதுப் பணித் துறையின் காவிரி பாசனப் பிரிவில் காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக