விபத்து நடந்து 10 நாள்களுக்கு மேலாகியும் சீர் செய்யப்படாமல் உள்ள பாலத்தின் சுவர். (வலதுபடம்) சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூருக்கு 2 கி.மீ
நெய்வேலி:
வடலூர் அருகேயுள்ள கண்ணுத்தோப்பு கிராமத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகிய பாலத்தில் மாதத்துக்கு இரு விபத்து நடந்து வருகிறது.
ஆனால் அப்பாலத்தை மாற்றியமைக்கவோ அல்லது சீர்செய்யவோ, குறைந்தபட்சம் பாலத்தின் தன்மையை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை பதாகைகளோ எதையும் செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட விக்கிரவாண்டி-தஞ்சை சாலை மார்க்கத்தில் வடலூருக்கு 2 கி.மீட்டருக்கு முன்னதாக அமைந்துள்ளது கண்ணுத்தோப்பு குறுகியபாலம். இப்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு அவசரத் தேவைக்காக கட்டப்பட்டது.
இருப்பினும் கடந்த 75 ஆண்டுகளாக இது தாற்காலிகப் பாலமாகவே இருந்துவருகிறது.இச்சாலை மார்க்கத்தில் சென்னையிலிருந்து சிதம்பரம், கும்பகோணம்,மயிலாடுதுறை, தஞ்சை,திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கு செல்லும் நெடுந்தொலைவு அதிவேக பஸ்கள் இப்பாலத்தைக் கடந்தே செல்கின்றன.இதுதவிர்த்து, நகரப் பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள், ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வேன்கள் என அனைத்தும் இப்பாலத்தின் மீதே சென்றுவருகின்றன.
இது குறுகிய பாலமாக இருப்பதால், அறிமுகமில்லாத வாகன ஓட்டி இப்பாலத்தை கடக்க முற்படும் போது, விபத்துக்குள்ளாகிறது. ஆண்டுக்கு சராசரியாக 20 விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சரக்கு வாகனங்களே இவ்விபத்தில் சிக்குவதால், பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து, அவை சரிசெய்யப்படாமல் மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். அதற்குள் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைவது வாடிக்கையாகிவிட்டது
.உதாரணத்துக்கு ஜூலை 2-ம் தேதி, ஒரு சரக்கு லாரியை ஓட்டிவந்த வாகன ஓட்டி குறுகிய பாலத்தின் தன்மை தெரியாமல் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லாரியின் ஒரு பக்க டயர்கள் மட்டும் பாலத்தின் விளிம்பில் சிக்கிக் கொண்டதால், லாரி கவிழாமல், சேதமடைந்ததோடு நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மறு தினமே லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து இடையூறின்றி செயல்படத் துவங்கியது. இருப்பினும் சரக்கு வாகனத்தால் சேதமடைந்த பாலத்தின் பக்கவாட்டுச்சுவர் இதுவரை சீர் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது.
பகலில் வருவோர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை இயக்கிச் சென்றாலும், இரவில் வாகனத்தை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.விபத்து நடந்து 10 தினங்களுக்கு மேலாகியும், துவரை அவ்விடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் பார்வையிடவும் இல்லை. மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை. தற்போது அவர்கள் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை சரிசெய்ய தங்களுக்கு சாதகமான ஒரு ஒப்பந்ததாரரை தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேரம் பேசி முடிந்த பின்னர் தான் வேலையை துவங்குவார்கள் என பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
பாலத்தை சீர் செய்யும் வரையாவது இடிந்த இடத்தில் எச்சரிக்கை சிவப்புச் சின்னமோ அல்லது மணல் மூட்டைகளையோ அடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வராதது ஏன்? பெரிய விபத்தேதும் ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக